மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
தில்லையாடி கிராமத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில், தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பட்டாசுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆலையில் 11 பேர் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை 3 மணி அளவில் திடீரென பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதில் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனா். விபத்து ஏற்பட்ட கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.
இந்த விபத்தில் 4 இளைஞர்களின் உடல் சிதறி பாகங்கள் 500 மீட்டர் தூரம் வரை 18 இடங்களில் சிதறி கிடந்தன. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்ததும் நாகை மாவட்ட எஸ்.பி. ஹர்ஷ்சிங் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.
இதையடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்தார்.
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 4 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பொறையாறு பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.