குடும்பத் தகராறில் மனைவியை கத்திரிக்கோலால் கொடூரமாக குத்திவிட்டு, கணவனும் குத்தி தற்கொலை முயன்ற சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பாநகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(45). ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வரும் இவர் தனது மனைவி சத்யா(40) மற்றும் ஒரு மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார். சத்யா வீட்டு வேலை செய்து வருகிறார். வெங்கடேசனுக்கு அவரது மனைவி சத்யா நடவடிக்கையில் சந்தேகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே சமீப காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு வெங்கடேசன் சந்தேகத்தின் பேரில் தனது மனைவி சத்யாவிடம் அவரது செல்போனை கேட்டுள்ளார். சத்யா போனை தர மறுத்ததால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் வீட்டில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து சத்யா வயிற்றில் சரமாரி குத்தியுள்ளார். பின்னர் அதே கத்திரிக்கோலால் வெங்கடேசனும் தன்னை தானே வயிற்றில் குத்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
சத்யா மற்றும் அவரது மகன் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நுங்கம்பாக்கம் போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த சத்யா மற்றும் வெங்கடேசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சத்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கணவர் வெங்கடேசன் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் உரிய விசாரணை நடைபெறும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.