ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருப்பம்: இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி அதிரடியாக கைது

By KU BUREAU

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில முதன்மை பொதுச்செயலாளர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே ஜூலை 5-ம் தேதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்குத் தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம் உள்பட 21 பேர் அடுத்தடுத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங்க் கொலை செய்யப்பட்டதற்கான காரணம், அதற்கு மூளையாக செயல்பட்டவர்கள் யார் என்ற முழுமையான விவரம் இதுவரை வெளியாகவில்லை. இதனால் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை போலீஸார், காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காவலில் உள்ள அருள் கொடுத்த தகவலின் படி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இளைஞர் காங்கிரஸ் மாநில முதன்மை பொதுச்செயலாளர் அஸ்வத்தாமனை போலீஸார் கைது செய்துள்ளனர். இவரது தந்தை நாகேந்திரன் பிரபல ரவுடி என்று கூறப்படுகிறது. நாகேந்திரனுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆம்ஸ்ட்ராங்கின் செல்போனை போலீஸார் ஆய்வு செய்த போது சிறையில் இருந்தபடி ரவுடி நாகேந்திரன் அவரிடம் பேசியது தெரிய வந்தது. நிலப்பிரச்சினை தொடர்பாக சிறையில் இருந்தபடி அவர் ஆம்ஸ்ட்ராங்கை மிரட்டியதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. பகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தாமன் உள்பட இதுவரை 22 பேர் கைதாகி உள்ளனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை கட்சியில் இருந்து நீக்குவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE