காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனை: 9 வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் கைது

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே 9 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. மாணவ, மாணவிகளிடம் கூட கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சிறுகாவேரிப்பாக்கம் பகுதிக்கு விரைந்து வந்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர், சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்து சுமார் 200 கிராம் எடையுள்ள கஞ்சா இலைகளை பறிமுதல் செய்தனர்.

காவல்துறையினரின் விசாரணையில் அவர் சிறுகாவேரிப்பாக்கம், மங்கையர்கரசி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன்(26) என்பது தெரிய வந்தது. இவர் மீது ஏற்கனவே சிவகாஞ்சி காவல் நிலையத்தில் 5 வழிப்பறி வழக்குகளும், 3 கஞ்சா வழக்குகளும், உத்திரமேரூர் பகுதயில் ஒரு வழிப்பறி வழக்கும் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீஸார் முருகனை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE