மதுரை அருகே நின்ற லாரி மீது கார் மோதல்: மதிமுக நிர்வாகிகள் 3 பேர் உயிரிழப்பு

By KU BUREAU

மதுரை: மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பச்சை முத்து (50). இவரது சகோதரர் அமிர்தராஜ் (44). நண்பர்கள் புலிசேகர்(34) மற்றும்பிரபாகரன். இவர்கள் அனைவரும் மதிமுக தொண்டரணி நிர்வாகிகள்.

மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பச்சை முத்து,மனைவி வளர்மதி (45) மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் காரில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். கூட்டம் முடிந்த பின்னர்இவர்கள் அனைவரும் மதுரைக்குகாரில் புறப்பட்டனர். அமிர்தராஜ் காரை ஓட்டினார். நேற்று அதிகாலைசிட்டம்பட்டி சுங்கச்சாவடியை நோக்கி கார் வந்தது.

அப்போது, எதிர்பாராதவிதமாக சுங்கச்சாவடி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரிமீது, மதிமுக நிர்வாகிகள் வந்தகார் மோதியது. இக்கோர விபத்தில் பச்சைமுத்து, அமிர்தராஜ்,புலி சேகர் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த பிரபாகரன், வளர்மதி ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு, மதுரையில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து வந்த மேலூர் போலீஸார் 3பேரின் உடல்களை மீட்டு, பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்த மதிமுக முதன்மைசெயலாளர் துரை.வைகோ நேற்று மதியம் மதுரை வந்து, உயிரிழந்த 3 பேரின் உடல்களுக்கும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன்உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

துரை வைகோ இரங்கல்: மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சிப் பொதுக்குழுவில் பங்கேற்றுவிட்டு, ஊருக்குத் திரும்பியபோது நேரிட்ட விபத்தில் தொண்டரணியைச் சேர்ந்த பச்சைமுத்து, அமிர்தராஜ், புலி சேகர் ஆகியோர் உயிரிழந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன். உயிரிழந்த மூவரும் எனது குடும்பத்தினர்போல பழகியவர்கள். அவர்களது மறைவு பேரிழப்பு. இவர்களது இழப்புக்கு காரணமாகி விட்டோமே என்று மனம் துடிக்கிறது. எனவே, என் டெல்லி பயணத்தை ரத்து செய்துவிட்டு, அந்தக் குடும்பங்களின் துயரில் பங்கேற்க மதுரைக்கு செல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE