ஹாஜிபூர்: பீகார் மாநிலம் வைஷாலி அருகே கன்வார் யாத்திரை சென்ற பக்தர்களின் டிஜே வாகனம் மீது உயர் அழுத்த மின்கம்பி உரசியதில் 9 பேர் உயிரிழந்தனர். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் ஞாயிற்றுகிழமை இரவில் சுல்தான்பூர் கிராமத்தில் நடந்துள்ளது. கன்வார் யாத்திரை சென்ற பக்தர்கள் சரண் மாவட்டம் சோனேபூரில் உள்ள பாபா ஹரிஹர் நாத் கோவிலுக்கு ஜலாபிஷேக சடங்குகளைச் செய்யச் சென்றனர். அப்போது பக்தர்கள் சென்ற டிஜே வாகனம் மீது மின்கம்பி உரசி இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
இச்சம்பவத்தில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். வாகனத்தின் உயரம் மிக அதிகமாக இருந்ததால்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அதனால்தான் அது உயர் அழுத்தக் கம்பியில் சிக்கியது என்று ஹாஜிபூர் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணை நடைபெற்றுவருகிறது. இதில் யாரேனும் தவறு செய்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
» வங்கதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது ராணுவம் - திரும்புமா அமைதி?
» பாம்பனின் புதிய செங்குத்து தூக்குப் பாலத்தில் ரயில் இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம்
கன்வார் யாத்திரையில் பக்தர்கள் உயிரிழந்ததற்கு அந்த மாநில முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
வட மாநிலங்களில் புகழ்பெற்ற கன்வார் யாத்திரை நடைபெற்று வருகின்றது. இதில் பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கங்கையில் புனித நீர் எடுத்துச் சென்று, தங்கள் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் அபிஷேகம் செய்து வருகின்றனர்.