ஏடிஎம் கொள்ளையர்களை விரட்டிப் பிடித்த போலீஸ்: சினிமா பாணியில் பரபரப்பு

By KU BUREAU

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்த கும்பலை போலீஸார், சினிமா பாணியில் துரத்தி கைது செய்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், அனந்தபூரில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்தில் உள்ள ஏடிஎம்மில் கியாஸ் கட்டர் மூலம் வெட்டி ஒரு கொள்ளைக் கும்பல் பணத்தை கொள்ளையடித்தது. இதையடுத்து கர்நாடகாவில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் டெல்லியை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய கர்நாடகா மாநிலம், பாகல்கோட் எஸ்.பி அமர்நாத் ரெட்டி அறிவுறுத்தினார். இதனால் ஆந்திரா, கர்நாடகா ஆகிய இரண்டு மாநில போலீஸாரும் அலர்ட் செய்யப்பட்டனர்.

இதன்பேரில், ஹுனகுண்டா வழியாக விஜயபுரா செல்லும் பெல்காம் சோதனைச்சாவடியில் போலீஸார் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக ஏடிஎம்மில் கொள்ளையடித்த கும்பல் வந்தது. போலீஸாரைக் கண்டதும் தன்னூர்-முதேபிஹால் மாற்றுப்பாதையில் அவர்கள் தப்பிக்க முயன்றார். அவர்களை போலீஸார் வாகனத்தில் துரத்தினர். அப்போது கொள்ளையர்களின் வாகனம் காவல் துறையினரின் வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதனால் கொள்ளையர்கள் வாகனத்தை விட்டு வயலில் இறங்கி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து, அட்டஹோலாவில் வேலை செய்து கொண்டிருந்த கூலித்தொழிலாளர்களின் உதவியுடன் இரண்டு கொள்ளையர்களை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களை ஹுனகுண்டா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த ஆந்திர போலீஸார், அதன்பின் ஆந்திராவுக்கு அழைத்துச் செல்கின்றனர். மேலும், இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE