ஆன்லைன் கடன் செயலி நிறுவனத்தினர் மிரட்டல்: தூத்துக்குடியில் இளம்பெண் தற்கொலை

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: ஆன்லைன் கடன் செயலி நிறுவனத்தினரின் தொடர் மிரட்டல் காரணமாக, தூத்துக்குடியில் இளம்பெண் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தூத்துக்குடி பால்பாண்டி நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் மிதுன் கார்த்திகேயன். இவருடைய மனைவி காவிய சுதா (22). இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில், காவியசுதா ஆன்லைன் கடன் செயலி மூலம் ரூ.1.50 லட்சம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கான தவணையையும் செலுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், அவர் ரூ.50 ஆயிரம் பணத்தை செலுத்தத் தவறியதாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடன் கொடுத்த ஆன்லைன் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அடிக்கடி அவரை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டினார்களாம். அதேசமயம், அவரது செல்போனை ஹேக் செய்து அதில் இருந்த படங்கள் மற்றும் செல்போன் எண்களை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து, அந்தப் புகைப்படங்களை வைத்து தவறாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்த, காவியசுதா அந்த செல்போன் எண்ணை பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளார். அதனால் அவரது செல்போனில் இருந்த உறவினர்களின் செல்போன் எண்களை தொடர்பு கொண்டு ஆன்லைன் நிறுவனத்தினர் மிரட்ட தொடங்கியுள்ளனர்.

இதில் மனமுடைந்த காவியசுதா நேற்று (ஆக.1) இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த தூத்துக்குடி சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ஆன்லைன் நிறுவனத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காவிய சுதாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், தூத்துக்குடி கோட்டாட்சியரும் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 - 24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE