அயனாவரம்: சென்னையில் சகோதரி வீட்டில் பேசிக் கொண்டிருந்த பெண் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர், திடீரென வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் அடுத்த செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஜெயசித்ரா (49). இவர் நேற்று தபால் பணியாக தடய அறிவியல் துறை பணிக்கு சென்றிருந்தார் பின்னர் அயனாவரத்தில் வசிக்கும் தனது சகோதரி பாண்டிசெல்வி வீட்டிற்கு ஜெயசித்ரா சென்றிருந்தார். அங்கு சகோதரியுடன் பேசிக் கொண்டிருந்த ஜெயசித்ரா, திடீரென வாந்தி எடுத்து பின்னர் மயங்கி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரி, உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் உதவியுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜெயசித்ராவை அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதாகவும், நாடித்துடிப்பு விகிதம் குறைவாக இருப்பதாகவும் கூறி, உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்து கெல்லிசில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஜெயசித்ராவை உறவினர்கள் அழைத்து சென்றனர்.
ஆனால் அங்கு ஜெயசித்ராவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அயனாவரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஜெயசித்ராவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் உடல் நலக்குறைபாடு காரணமாக உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
» பாம்பு பிடிக்க சென்றவர் பாம்பு கடித்து பலியான சோகம்
» ஸ்மார்ட்போன் மூலம் வறுமையை வென்ற 80 கோடி பேர்: இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியை பாராட்டிய ஐ.நா.