கன்னியாகுமரி: ஆட்டோ ஓட்டுநர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள ஐரேனிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் (50). இவர் ஆட்டோ ஓட்டி வாழ்ந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அவர் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் ஐரேனிபுரம் ஆட்டோ நிறுத்தத்தில் அவர் சவாரிக்காக காத்துக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சிலர், வாடகைக்கு ஆட்டோ வேண்டும் என கேட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுடன் டேவிட் சென்றுள்ளார். நெடுமாணிகுளம் அருகே வந்த போது, ஆட்டோவில் பயணித்த மர்ம நபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் டேவிட்டை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த டேவிட், அவர்களிடமிருந்து தப்பி, ரத்த வெள்ளத்தில் ஆட்டோவை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார்.
சுமார் 300 மீட்டர் தூரம் வரை வந்த அவர், தலை, கழுத்து, கை, கால் என பல இடங்களிலும் வெட்டுப்பட்டிருந்ததால், மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்து, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
» தமிழக மீன்பிடி படகில் இலங்கை கடற்படை மோதிய சம்பவம்: மத்திய அரசின் நடவடிக்கைகள் என்னென்ன?
» மத்திய அரசை கண்டித்து பழநியில் மறியல்: இடதுசாரிகள் 200 பேர் கைது
இதனிடையே குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட டேவிட், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவர் முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.