பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையரை கைது செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை 

By பி.டி.ரவிச்சந்திரன்

வேடசந்தூர்: வடமதுரை அருகே நில அளவை செய்வதற்கு லஞ்சம் வாங்கிய நில அளவையரை திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வேல்வார்கோட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜசேகர். இவர் தனது நிலத்திற்கு பட்டா கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பம் அப்பகுதி நிலஅளவையர் சுப்பிரமணியிடம் (59) வந்துள்ளது. இதையடுத்து நிலத்தை நேரில் பார்வையிட்டு அளவீடு செய்வதற்காக சுப்பிரமணி சென்றுள்ளார். அப்போது, நிலத்திற்கு பட்டா வழங்க ஏழாயிரம் ரூபாய் லஞ்சமாக சுப்பிரமணி கேட்டுள்ளார்.

லஞ்சம் தர விரும்பாத ராஜசேகர், திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் கூறியதுபோல் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை இன்று காலையில் வடமதுரையில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து ராஜசேகர், நிலஅளவையர் சுப்பிரமணியிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சுப்பிரமணியை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE