முதல் மனைவி இருக்கும்போதே 2ம் திருமணம்: வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் பணிநீக்கம்

By இரா.கார்த்திகேயன்

வெள்ளக்கோவில்: முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து, அந்த வாரிசுகளை முறைகேடாக பணி பதிவேட்டில் பதிவு செய்தது தொடர்பாக வெள்ளக்கோவில் தீயணைப்பு அலுவலர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலராக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தவர் வே.பிரபாகரன் (52). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார் பிரபாகரன். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதுகுறித்து முதல் மனைவிக்கு தெரியவந்ததும், அவர் பிரபாகரனின் இரண்டாவது திருமணம் குறித்து, அவருடைய உயர் அதிகாரியிடம் புகார் செய்தார்.

இந்த புகார் மீது கோவை மண்டல தீயணைப்புத் துறை இணை இயக்குநர் சரவணகுமார் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் விசாரணை நடத்தினார். விசாரணையில், முதல் மனைவி இருக்கும்போது சட்டத்துக்குப் புறம்பாக, பிரபாகரன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து இருப்பதும், சட்டப்படி திருமணம் செய்யாத பெண்ணுக்குப் பிறந்த குழந்தைகளை முறைகேடாக பணிப் பதிவேட்டில் பதிவு செய்து இருப்பதும் கண்டறியப்பட்டது.

இது தொடர்பான மாவட்ட தீயணைப்பு அலுவலர் விசாரணை அறிக்கையின் படி, ஒழுங்கீனமாக இருந்ததாக பிரபாகரனை, தீயணைப்புத்துறை கோட்ட துறை இணை இயக்குநர் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE