அன்னூர்: கோவை அருகே பாஜக முன்னாள் நிர்வாகி வீட்டில் ரூ.18.50 லட்சம் பணம், நகை திருடப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே சொக்கம்பாளையத்தில் உள்ள திருமுருகன் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார்(45). பாஜக முன்னாள் நிர்வாகியான இவர், வாகனங்களுக்கு வாட்டர் வாஷ் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், இடம் வாங்குவதற்காக ரூ.18.50 லட்சம் தொகையை தனது வீட்டில் வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த 18-ம் தேதி விஜயகுமார் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டிலிருந்த ரூ.18.50 லட்சம் பணம், 9 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. விஜயகுமார் அளித்த புகாரின் பேரில், அன்னூர் போலீஸார் விசாரித்தனர். 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
சிசிடிவி கேமரா காட்சி உள்ளிட்டவற்றை வைத்து விசாரித்தபோது, திருட்டில் ஈடுபட்டவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பரசன்(33) எனவும், கோவை சோமனூரில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை இன்று (மே 20) கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து திருடப்பட்ட நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.
முன்னதாக, தனது வீட்டில் ஒன்றரை கோடி ரூபாய் பணம் திருடப்பட்டதாக விஜயகுமார் தரப்பில் போலீஸாரிடம் கூறப்பட்டது. இறுதியில் வீட்டிலிருந்த ரூ.18.50 லட்சம் பணம் மட்டுமே திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பொய்யான தகவல் அளித்த விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
ஒன்றரை கோடி ரூபாய் திருடப்படவில்லை: இச்சம்பவம் தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் செய்தியாளர்களிடம் இன்று (மே 20) கூறும்போது,‘‘முதலில் விஜயகுமார் வீட்டில் ரூ.ஒன்றரை கோடி பணம், 9 பவுன் நகை திருட்டு போனது என புகார் வந்தது.விசாரணை இறுதியில் அன்பரசன் கைது செய்யப்பட்டார். அன்பரசனிடம் விசாரித்த போது, விஜயகுமார் வீட்டிலிருந்து ரூ.18.50 லட்சம் பணம் மட்டுமே எடுத்ததாக தெரிவித்தார்.
இதுகுறித்து புகார் அளித்த விஜயகுமாரிடம் கேட்ட போது ரூ.18.50 லட்சம் மட்டுமே திருட்டு போனதை அவர் ஒப்புக் கொண்டார். பொய்யான தகவலைக் கூறியதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நகை, பணம் தொலைந்தாலோ, திருட்டு போனாலோ அதை மிகைப்படுத்தி சொல்ல வேண்டாம். இதனால் விசாரணை திசை மாறும். கைதான அன்பரசன் மீது 18-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன’’ என்றார்.