மாணவர் கடத்தல் வழக்கில் தூத்துக்குடியில் ஐகோர்ட் மகாராஜன் கைது: மதுரை போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

By என்.சன்னாசி

மதுரை: மதுரை பள்ளி மாணவரைக் கடத்திய வழக்கில் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட "ஐகோர்ட்" மகாராஜனை காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதாக மதுரை போலீஸார் கூறியுள்ளனர்.

மதுரையில் கடந்த 11ம் தேதி, தனியார் பள்ளியில் படிக்கும் 14 வயது மாணவன் அவரது ஆட்டோ ஓட்டுநருடன் கடத்தப்பட்ட வழக்கில் போடியை சேர்ந்த முன்னாள் காவலர் செந்தில்குமார், நெல்லை ரகுமான் பேட்டை அப்துல் காதர், தென்காசி சிவகிரியைச் சேர்ந்த வீரமணி, காளிராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் தூத்துக்குடியைச் சேர்ந்த "ஐகோர்ட்" மகாராஜன், ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவியான சூர்யா ஆகியோரை மதுரை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் சூர்யா குஜராத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து, மகாராஜனை தனிப்படையினர் தீவிரமாக தேடிய நிலையில், நேற்று அவரை வேறொரு வழக்கு ஒன்றில் தூத்துக்குடி போலீஸார் கைது செய்திருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து மதுரை மாணவர் கடத்தல் வழக்கில் "ஐகோர்ட்" மகாராஜனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர் காவல் ஆணையர் ஜே.லோகநாதன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE