சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.65 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தாய்லாந்தில் இருந்து பதப்படுத்தப்பட்ட கஞ்சாவை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்றுவிட்டு வந்த சென்னையைச் சேர்ந்த யூசுப் மதீன் (50) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் கொண்டு வந்த பார்சலை பிரித்து அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் பதப்படுத்தப்பட்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ரூ.65 லட்சம் மதிப்புள்ள 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், யூசுப் மதீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
» பிஹார் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்: 3ம் வகுப்பு மாணவனை நிஜ துப்பாக்கியால் சுட்ட 5 வயது சிறுவன்
தாய்லாந்து, நேபாளம், சீனா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் விளையக்கூடிய இந்த கஞ்சா உயர் ரகம் கொண்டது. அதிக போதைக்காக இதனை பதப்படுத்தி, ஒரு கிலோ ரூ.1 கோடி வரை விற்பனை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.