சேலம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரிலேயே தான் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதாக, பெண் போலீஸாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
பெண் போலீஸார் குறித்து அவதூறாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த யூடியூபர் சவுக்கு சங்கரை, கோவை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் பெண் போலீஸாரும், சமூக ஆர்வலர்களும் புகார் அளித்தனர். இதன் பேரில் சென்னை, திருச்சி, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை, நீலகிரி போலீஸார் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்தனர். பின்னர் அவரை நீலகிரி நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். அப்போது போலீஸார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. விசாரணைக்கு பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்படுவதற்காக இன்று காலை சென்னை கொண்டு செல்லப்பட்டார்.
சேலம் தாண்டி ஆத்தூர் அருகே போலீஸ் வாகனம் சென்று கொண்டிருந்தபோது, திடீரென சவுக்கு சங்கருக்கு வயிற்று வலி ஏற்பட்டு அவர் மயங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உடனடியாக ஆத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சுமார் 2 மணி நேர சிகிச்சைக்குப் பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார். மீண்டும் காவல்துறை வேனில் ஏறுவதற்காக சவுக்கு சங்கர் வந்தார். அப்போது வேனில் இருந்தபடியே, ”என் கைதுக்கு உதயநிதி தான் காரணம், உதயநிதி உத்தரவின்பேரில், என் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்கு போட்டு கைது செய்து வருகின்றனர்” என தெரிவித்தார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.