கோவளம்: செங்கல்பட்டு அருகே மது அருந்தும் தகராறில், தாயை அடித்ததாக பரோட்டா மாஸ்டரைக் குத்திக்கொலை செய்த நபரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜலால் (54). இவர் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் புது மசூதி தெருவில் உள்ள உன்னிகிருஷ்ணன் என்கிற யூசுப் என்பவரின் வீட்டின் ஒரு போர்ஷனில் வாடகைக்கு தங்கி இருந்தார். கோவளம் தர்கா அருகே சில மாதங்களாக சித்திக் (33) என்பவரும் அவருடைய தாயார் ஆயிஷா என்பவரும் தங்கி இருந்தனர். காலை முதல் மாலை வரை தர்காவுக்கு வெளியே இருந்துவிட்டு இரவு தங்க உன்னிகிருஷ்ணனின் மற்றொரு போர்ஷன் வீட்டை இவர்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த பழக்கத்தைப் பயன்படுத்தி உன்னிகிருஷ்ணனுடன், சித்திக் மது அருந்துவது வழக்கமாக இருந்து வந்தது. நேற்று மாலை சித்திக் தனது தாயாருடன் உன்னிகிருஷ்ணனின் வீட்டிற்கு வந்து மது அருந்துவதற்காக ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பரோட்டா மாஸ்டர் ஜலால், “இப்படி குடியிருக்கும் வீட்டின் உரிமையாளருடன் மது அருந்துகிறாயே உனக்கு வெட்கமாக இல்லையா?” என்று கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அங்கு வந்த சித்திக்கின் தாயார் ஆயிஷா, “எனது மகனை நீ எப்படி திட்டலாம்?” என்று கூறி ஜலாலை அசிங்கமாக திட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதிலாக ஜலாலும் அந்த பெண்மணியை தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதைப் பார்த்துவிட்டு “எனது தாயை அடித்து விட்டாயே” என்று சொல்லி ஆத்திரமடைந்த சித்திக், பழங்களை அறுப்பதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து ஜலாலின் நெஞ்சுப்பகுதியில் குத்தியுள்ளார். இதில் ஜலாலின் இதயப் பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறி, அவர் மயங்கி சரிந்து விழுந்தார். இதனால் பயந்து போன ஆயிஷாவும், சித்திக்கும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதையடுத்து வீட்டின் உரிமையாளர் உன்னிகிருஷ்ணன் கேளம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் அளித்தார். கேளம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் நாஞ்சில் குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், நெஞ்சுப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட ஜலால் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. போலீஸார் ஜலாலின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலையில் ஈடுபட்ட சித்திக் மற்றும் அவரது தாயாரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று மாமல்லபுரம் அருகே அவர்கள் இருவரும் ஒரு அரசுப் பேருந்தில் பயணிப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அந்தப் பேருந்தை மடக்கி இருவரையும் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.