உத்தரப்பிரதேசம்: ரூ.15 லட்சம் வரதட்சணை தராத மனைவிக்கு வாட்ஸ் அப்பில் முத்தலாக் என்று குறுஞ்செய்தி அனுப்பிய அவரது கணவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முத்தலாக் முறைக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தாலும், அதனையும் மீறி பலர் செயல்பட்டு வருகின்றனர். இதற்குச் சான்றாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள சதத்கஞ்ச் காவல் நிலைய எல்லையில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. உத்தப்பிரதேச மாநிலம், மலிஹாபாத் காஸ்மண்டி காலாவைச் சேர்ந்தவர் சதாப் முனீர். மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கு 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதன் பின் சில நாட்களிலேயே மெடிக்கல் ஷாப் திறக்க வேண்டும் என்று அவரது மனைவியிடம் ரூ.10 லட்சம் கேட்டுள்ளார்.
ஆனால், அவ்வளவு பணம் தங்கள் குடும்பத்தினரால் தர முடியாது என்று அவரது மனைவி கூறியுள்ளார். இதனால் கர்ப்பமாக இருந்த மனைவியை அவரது கணவர் சதாப் முனீர், கருக்கலைப்பு செய்ய முயன்றுள்ளார். ஆனால், அது முடியாததால், வீட்டை விட்டு விரட்டியுள்ளார். இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் 10 லட்ச ரூபாயை பலரிடம் திரட்டி கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், அவரது கணவரின் பணம் பறிக்கும் செயல் குறையவில்லை. கடந்த 2022-ம் ஆண்டு தனது தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்று அவரது மனைவியிடம் மீண்டும் 15 லட்ச ரூபாய் வேண்டும் என்று சதாப் முனீர் கேட்டுள்ளார். ஆனால், அவர் கேட்ட பணத்தை தரமுடியாது என்று அவரது மனைவி கூறியுள்ளார். இதனால் அவரது கணவர் அடித்து உதைத்துள்ளார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் அவரது மனைவி அளித்துள்ள புகாரில்," 15 லட்ச ரூபாயை நான் தர மறுத்ததால், சதாப் என்னை அடித்து இரண்டு மகன்களுடன் வெளியேற்றினார். அத்துடன் 2022 ஆகஸ்ட் 10-ம் தேதி வாட்ஸ்அப் எண்ணில் இருந்து முத்தலாக் என்ற செய்தியை அனுப்பியுள்ளார். இதனால் இந்த பிரச்சினையைத் தீர்க்க நான் எனது மகன்களுடன் எனது மாமியார் வீட்டிற்குச் சென்றபோது, அவர்கள் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. மேலும் ஆசிட் வீசுவதாக என் கணவர் மிரட்டினார். இதுவரை இப்பிரச்சினை தீர்ந்து விடும் என்று பார்த்தேன். ஆனால், என் கணவரால் இப்பிரச்சினை தீரவில்லை " என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், சதாப் முனீர் மீது போலீஸார் நேற்று வழக்குப்பதிவு செய்ததாக சாதத்கஞ்ச் காவல் துறை அதிகாரி பிரிஜேஷ் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.