உதகை: தடுப்புச் சுவரில் கார் மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: சுற்றுலா வந்த இடத்தில், தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் வியாபாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (45), வியாபாரியான இவர் தனது நண்பர்களான பிரவீன் (35) உட்பட 7 பேருடன் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்துள்ளார். அனைவரும் கூடலூரில் உறவினருக்குச் சொந்தமான காட்டேஜில் தங்கி கூடலூர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தளங்களை கண்டு ரசித்தனர். இதைத் தொடர்ந்து இன்று உறவினரின் இன்னோவா காரில் உதகைக்கு வந்து பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தனர்.

இதன் பின்னர் மீண்டும் கூடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை பிரவீன் ஓட்டியுள்ளார். அப்போது காமராஜர் அணை அருகே உள்ள பாலத்தை கடக்கும் போது கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கி சேதமடைந்தது.

இதனால், முன் இருக்கையில் அமர்ந்திருந்த பூபதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.‌ மற்ற 7 பேரும் காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களுக்கு உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், 2 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், பூபதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே, காரை ஓட்டிய பிரவீன் குடிபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து போலீஸார் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE