கொதிக்கும் பாலில் குழந்தையை மூழ்கடித்த சாமியார்: நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

By KU BUREAU

உத்தரப் பிரதேசம்: கொதிக்கும் பால் பானைக்குள் குழந்தையை மூழ்கடித்து சாமியார் ஒருவர் செய்த சடங்கு குறித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கோயில்களில் கடைபிடிக்கும் பல்வேறு சடங்குகள் மூடநம்பிக்கையின் உச்சமாக இருக்கின்றன. சில கோயில்களில் கொதிக்கும் எண்ணெயில் கைகளை விடுவது, உடலில் ஊசியால் குத்துவது போன்ற ஆபத்தான சடங்குகள் கடவுளின் பெயரால் செய்யப்படுகின்றன. இதனால் கடவுள் மகிழ்ச்சி அடைவார் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆனால் ஆபத்தான முறைகளில் செய்யும் இப்படியான சடங்குகள் சில சமயங்களில் உயிரையே பறித்துவிடும்.

உத்தரப் பிரதேசத்தில் பலியா மாவட்டத்தில் கொதிக்கும் பால் பானைக்குள் குழந்தையை சாமியார் ஒருவர் மூழ்கடிக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலியா மாவட்டத்தில் உள்ள ஷ்ரவன்பூர் கிராமத்தில் நடந்த மதச்சடங்கில் ஒரு குழந்தையைக் கொதிக்கும் பால் பானைக்குள் சாமியார் ஒருவர் மூழ்கடிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனித நகரம் என்று அழைக்கப்படும் வாராணசியைச் சேர்ந்த சாமியார் ஒருவர் குழந்தைக்கு செய்த இந்த வினோத சடங்கு கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில், ஒரு சிறு குழந்தையைக் கொதிக்கும் பால் பானைக்குள் மூழ்கடித்த பிறகு, பூசாரி குழந்தையை தூக்கி, அதே சூடான பாலை தன் மீதும் குழந்தையின் மீதும் ஊற்றுகிறார். இதனால் அந்த குழந்தை கதறி அழுகிறது. இந்த வீடியோ பரவலான கண்டனத்தை பெற்றுள்ளது. இதுபோன்ற நடைமுறைகள் குழந்தைகளுக்கு உடல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துவதாக பலர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, அதைப் பார்த்த வழக்கறிஞர் ஒருவர், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை (NCPCR) தலையிட வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகளைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையத்திடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE