தருமபுரி: தொப்பூர் அருகே மண் ஏற்றிச்சென்ற டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம் தொப்பூர் ரயில் நிலைய பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர்(25). ஓட்டுநரான இவர், தனது நண்பரான தொப்பூர் அடுத்துள்ள உம்மியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்(23) என்பவருடன் இன்று அதிகாலை 2 மணியளவில் தொப்பூர் அருகே சந்திரநல்லூர் பகுதியில் இருந்து டிராக்டரில் மண் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.
புறப்பட்ட சற்று நேரத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தின் போது சுதாகரும், கோவிந்தராஜும் தரையில் விழுந்தனர். அவர்கள் மீது டிராக்டரில் இருந்த மண் கொட்டி மூடியது. இதில் இருவரும் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த தொப்பூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
» கப்பலூர் டோல்கேட் விவகாரம்: வணிகர்கள் கடையடைப்பு, உண்ணாவிரதம்.. ஆர்.பி.உதயகுமார் கைது!
» மினிமம் பேலன்ஸ் அபராதம்: 5 ஆண்டுகளில் ரூ.8,500 கோடி வசூல் செய்த பொதுத்துறை வங்கிகள்