கண்ணை மறைத்த இன்ஸ்டாகிராம் காதல்: கணவரை கூலிப்படை ஏவி கொலை செய்த மனைவி

By KU BUREAU

தும்கூர்: இன்ஸ்டாகிராமில் பழகிய காதலனுக்காக கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், கலபுர்கி மாவட்டம், சிஞ்சுலி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(30). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தும்கூரை சேர்ந்த ஹர்ஷிதா(28) என்ற இளம்பெண் அறிமுகமாகியுள்ளார். இதன் பின் மூன்று ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்துள்ளனர். இதன் பின் இவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், ஹர்ஷிதாவிற்கு சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் குண்டா என்ற இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பு தகாத உறவாக மாறி 2 மாதங்களுக்கு முன்பு குண்டாவுடன் ஹர்ஷிதா வீட்டை விட்டு ஓடி விட்டார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் ஹர்ஷிதாவின் கணவர் பிரகாஷ் புகார் அளித்தார். இதன்பின் ஹர்ஷிதா வீடு திரும்பினார். கணவர் உயிருடன் இருந்தால், காதலருடன் வாழ முடியாது என்று முடிவு செய்த ஹர்ஷிதா அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

இதற்காக அவரது சகோதரர் சோமசேகருக்கும், காதலன் குண்டாவுக்கும் பணத்தை வழங்கியுள்ளார். இதன்படி பிரகாஷை தனி இடத்திற்கு சோமசேகர் வரவழைத்துள்ளார். அங்கு குண்டா ஏற்பாடு செய்திருந்த அவரது நண்பர் ரங்கஸ்வாமய்யாவும், சோமசேகரும் சேர்ந்து பிரகாஷை தாக்கினர். அவர்களிடமிருந்து தப்பிக்க நினைத்த பிரகாஷை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு விபத்தில் அடிபட்டு இறந்தது போல செட்டப் செய்தனர். ஆனால், மார்பில் கத்திகுத்து இருந்ததை வைத்து பிரகாஷ் கொலை செய்யப்பட்டதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

இந்தக் கொலை தொடர்பாக பிரகாஷின் மனைவி ஹர்ஷிதாவை பிடித்து விசாரித்த போது, இன்ஸ்டாகிராம் காதலனுக்காக கணவரை அவர் தான் கூலிப்படை ஏவி கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஹர்ஷிதா, சோமசேகர், ரங்கஸ்வாமய்யா ஆகியோரை கொரேட்டகெரே போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான குண்டாவை தேடி வருகின்றனர். இன்ஸ்டா காதலனுக்காக கணவரை மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE