ஒரே இரவில் 8 பேரை அடுத்தடுத்து தாக்கிய யானை: வாலிபர் பரிதாப மரணம்,7 பேர் படுகாயம்

By KU BUREAU

கோவை: ஊருக்குள் புகுந்த காட்டு யானையை விரட்டச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 7 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், அட்டுக்கல் மற்றும் கெம்பனூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. விராலியூர், கெம்பனூர் பகுதிகளில் ஊருக்குள் வலம் வரும் காட்டு யானைகள், தோட்டங்களில் வைக்கப்பட்டு இருக்கும் புண்ணாக்கு, தவிடு மற்றும் ரேஷன் கடைகளில் உள்ள அரிசியை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளன. இந்த யானைகள் வீட்டை உடைத்துக் கொண்டு உணவுப் பொருட்களை தேடுவதும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் விராலியூர் கிராமத்திற்குள் ஒற்றை யானை ஒன்று புகுந்துள்ளது. அப்போது ஊருக்குள் உள்ள பெருமாள் கோயிலில் இருந்து பூஜைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பூசாரி பாஸ்கரன் என்பவரை யானை தாக்கியது. இதில் பாஸ்கரன் படுகாயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த இளைஞர்கள் சிலர், யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த யானை அருகில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக சென்றுள்ளது. பின்னால் கூச்சலிட்டபடி வந்த இளைஞர்களை, திடீரென யானை திரும்பத் துரத்தத் தொடங்கியுள்ளது. அப்போது யானை விரட்ட சென்ற கார்த்திக் (25) என்ற இளைஞர் யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். அவருடன் சென்ற மேலும் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதையடுத்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அருகில் உள்ள வனப்பகுதிக்குள் யானை சென்ற நிலையில், சிறிது நேரத்திலேயே மீண்டும் குடியிருப்பு பகுதிகளின் அருகே சுற்றித் திரிந்தது. இன்று அதிகாலை அந்த வழியாக விவசாயப் பணிகளுக்காக சென்று கொண்டிருந்த சிலரையும் யானை தாக்கியது.

இதில் ஒட்டுமொத்தமாக 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து யானை நடமாட்டம் இருந்து வருவதால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE