மூதாட்டியைக் கொன்று துண்டு துண்டாக வெட்டி அடையாறு ஆற்றில் வீசிய தம்பதி: சென்னையில் அதிர்ச்சி

By KU BUREAU

சென்னை: மூதாட்டியைக் கொன்று துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தம்பதி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வந்தவர் விஜயா(78). கட்டட தொழிலாளியான விஜயா, பகுதி நேரமாக ஓட்டல்களிலும் வேலை செய்து வந்தார். அவருக்கு லோகநாயகி எனும் மகள் உள்ளார். இவர் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் ஜூலை 17-ம் தேதி விஜயாவை பார்க்க தனது குழந்தைகளுடன் லோகநாயகி வந்துள்ளார். ஆனால், வேலை முடிந்து விஜயா வீடு திரும்பாததால் மகள் லோகநாயகி கவலை அடைந்தார். அவரை பல இடங்களில் தேடியும் பலனில்லாததால் ஜூலை 19-ம் தேதி எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் லோகநாயகி புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அத்துடன் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், பக்கத்து வீட்டில் வசிக்கும் பார்த்திபன் என்பவர் விஜயாவின் வீட்டுக்குள் புகுந்து மூட்டை ஒன்றை கட்டி தனது டூவீலரின் முன்பக்கத்தில் வைத்துக் கொண்டு புறப்பட்டு செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதனால் அவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அத்துடன் அவரது வீடும் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவரை ஜூலை 23-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸார் அழைத்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இதனால் பார்த்திபனின் செல்போனை கண்காணித்த போது, அவர் விருதுநகர் மாவட்டத்தில் மனைவியுடன் பதுங்கியிருந்த இடத்தை தனிப்படை போலீஸார் கண்டுபிடித்தனர். விருதுநகர் மாவட்ட போலீஸாரின் உதவியுடன் சவுண்டி தெருவில் தனது சகோதரியின் வீட்டில் பதுங்கியிருந்த பார்த்திபன் மற்றும் அவரின் மனைவி சங்கீதாவை, சென்னை தனிப்படை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்திய போது பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின.

விஜயாவின் காது மற்றும் மூக்கில் கிடந்த 2 சவரன் தங்க நகைகளையும், சுருக்குப் பையில் இருந்த 30,000 ரூபாய் பணத்தையும் எடுப்பதற்காக அவரை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்து அவரது உடலை பார்த்திபன், சங்கீதா தங்களது வீட்டிற்கு எடுத்து வந்துள்ளனர். விஜயாவை போலீஸார் தேடுவதைத் தெரிந்து அவரது உடலை பார்த்திபன் துண்டு, துண்டாக வெட்டி அடையாறு ஆற்றில் வீசியது தெரிய வந்தது. இதையடுத்து இந்த தம்பதியை சென்னைக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE