கடலூர் அதிமுக பிரமுகர் புதுச்சேரி அருகே கொலை

By KU BUREAU

புதுச்சேரி: கடலூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர், புதுச்சேரி அருகே கொலை செய்யப்பட்டார்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரைச் சேர்ந்தவர் பத்மநாபன் (48). கடலுார் 25-வது வார்டு அதிமுக அவைத் தலைவரான இவர், பெயின்டராகப் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், புதுச்சேரி பாகூர் அருகேயுள்ள திருப்பனாம்பாக்கம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கோயில் திருவிழா தெருக்கூத்து நிகழ்ச்சியைச் பார்க்க சென்ற பத்மநாபன், நேற்று காலை தனது நண்பர் ரங்கா என்பவருடன் பைக்கில் கடலூர் திரும்பிக் கொண்டிருந்தார்.

பாகூர் இருளஞ்சந்தை தண்ணீர் தொட்டி அருகே, பின்னால் காரில் வந்த கும்பல் பைக் மீது வேகமாக மோதியது. இதில் கீழே விழுந்த பத்மநாபனை, காரில் இருந்த இறங்கிய மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டது.

இது தொடர்பாக பாகூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். போலீஸார் கூறும்போது, "கடந்த ஆண்டு கடலூரில் நடைபெற்ற மஞ்சள்நீர் விழாவில் நடனமாடிய பாஸ்கர் என்பவரை, பத்மநாபன் தரப்பினர் தாக்கிக் கொன்றனர். இது தொடர்பாக பத்மநாபன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பழிவாங்கும் வகையில்... கடந்த நவம்பர் மாதம் ஜாமீனில் வெளிவந்த பத்மநாபன், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். ஏற்கெனவே நடந்தகொலைக்கு பழிவாங்கும் வகையில் பத்மநாபன் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணம் உள்ளதா என்று விசாரித்து வருகிறோம்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE