மதுரை: பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட திருப்பூர் இளைஞரை மதுரை சைபர் க்ரைம் போலீஸார் இன்று கைது செய்தனர்.
கடந்த மே 10ஆம் தேதி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்ப பெண்களின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் யாரோ ஒரு நபர் பதிவிட்டுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் பேரில், மதுரை மாவட்ட சைபர் க்ரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சமூக வலைதளங்களில் பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை திருடி, அவற்றை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர், திருப்பூர் மாவட்டம், ஆத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சூர்யா (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து செல்போன், சிம்கார்டுகள், இன்டர்நெட் வசதிக்கான மோடம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சூர்யாவை கைது செய்து நடவடிக்கை எடுத்த தனிப்படையினரை மதுரை காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பாராட்டினார். மேலும், இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் எச்சரித்துள்ளார்.
» கோவை - மேட்டுப்பாளையத்தில் புதிய குடிநீர் திட்டத்துக்கான குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரம்