மும்பை: நவி மும்பையில் 3 மாடி கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பையின் ஷாபாஸ் கிராமத்தில் இன்று காலை மூன்று மாடி கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் 2 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் போலீஸார், தீயணைப்புப் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக நவி மும்பை மாநகராட்சி ஆணையர் கைலாஸ் ஷிண்டே கூறுகையில், "இன்று அதிகாலை 5 மணியளவில் கட்டிடம் இடிந்து விழுந்தது. இது ஒரு 3 மாடி கட்டிடம். சம்பவம் நடந்த இடம் ஷாபாஸ் கிராமம் பேலாப்பூர் வார்டுக்கு உட்பட்டது. இக்கட்டிடத்தில் 13 குடியிருப்புகள் இருந்தன. இந்நிலையில் இடிபாடுகளில் இருந்து இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர். சிக்கியுள்ள மேலும் இருவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. இது 10 ஆண்டுகள் பழமையான கட்டிடம். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. கட்டிட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார். கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
» கூலிப்படையை ஏவி ரவுடி கொலை: குற்றவாளிகளைக் காட்டிக்கொடுத்த டாட்டூ
» விவாகரத்துக்கு விண்ணப்பித்த மகளின் கால் துண்டிப்பு: பாகிஸ்தானில் நடந்த பயங்கரம்