பெட்ரோல் டேங்கில் காதலனை அமரவைத்து ரொமான்ஸ்: திருப்பூர் ஜோடிக்கு ரூ.13,000 அபராதம் விதித்த போலீஸ்!

By KU BUREAU

திருப்பூர்: திருப்பூர் அருகே ரீல்ஸ் எடுப்பதற்காக பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது காதலனை அமர வைத்து காதலி ஓட்டுவது போன்று வீடியோ எடுத்த ஜோடிக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக தற்போது செல்போன்களின் காலம் ஆக்கிரமித்துள்ளது. அதிலும் சமூக வலைத்தளங்களில் விதவிதமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதில் இளைஞர்களிடையே பெரும் ஆர்வம் நிலவி வருகிறது. அதிவேகத்தில் இருசக்கர வாகனங்களை ஓட்டுவது, சாகசங்கள் செய்வது, நெருப்பு வளையம் ஏற்படுத்தி தண்ணீருக்குள் குதிப்பது, உயரமான இடத்தின் அருகே நின்று புகைப்படம் எடுப்பது போன்ற ஆபத்தான நிகழ்வுகளில் இளைஞர் பட்டாளம் ஈடுபட்டு வருகிறது.

அவ்வப்போது இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகும்போது, போலீஸார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ வைரலானது. காதலனை பெட்ரோல் டேங்கின் முன்புறம் அமர வைத்து, சேலை கட்டிய பெண் ஒருவர் தலைக்கவசம் இன்றி வாகனத்தை ஆபத்தான முறையில் இயக்குவது போன்று அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பலரும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதன் பேரில் போலீஸார் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகி இருந்த தகவல்களைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த பழங்கரை பெரியாயிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவர், தனது காதலி ப்ரீத்தி என்பவர் உடன் இணைந்து இந்த வீடியோவை பதிவிட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

பின்னர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியது, ஆபத்தான முறையில் வீடியோ பதிவிட்டது போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் இது போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து அந்த ஜோடியை அனுப்பி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE