'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகருக்கு செய்வினை மிரட்டல்: போலீஸில் பரபரப்பு புகார்

By KU BUREAU

சென்னை: 'பாக்கியலட்சுமி' தொடரில் நடித்து வரும் நடிகர் சதீஷ்குமாருக்கு பெண் ஒருவர் செய்வினை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் சதீஷ்குமார்(40). இந்த தொடரில் கோபி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் அவரைச் சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த நிலையில், சதீஷ் குமாருக்கு பெண் ஒருவர் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2023-ம் ஆம் ஆண்டு காலசேஷ்ரா காலனியில் உள்ள அறுபடை முருகன் கோயிலுக்கு சதீஷ்குமார் சாமி கும்பிடச் சென்றுள்ளார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சதீஷ்குமாருடன் ஃசெல்பி எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், அதற்கு சதீஷ்குமார் மறுப்பு தெரிவித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. சில நாட்கள் கழித்து அந்த பெண், செல்போன் மூலம் சதீஷ்குமாரை தொடர்பு கொண்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை சதீஷ்குமார் பிளாக் செய்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சதீஷ்குமாரின் வீட்டிற்கு வந்த அந்த பெண், குங்குமம் தடவிய எலுமிச்சை பழத்தை வீட்டில் வைத்து விட்டு செய்வினை செய்துவிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சதீஷ்குமார் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE