சென்னை: சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி காயரம்பேடு பகுதியை சேர்ந்தவர் பொன் இருளப்பன் (41). இவர் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் தொழில் செய்து வருகிறார். இவர் இன்று கிண்டியில் உபகரணங்களை வாங்கிக்கொண்டு கூடுவாஞ்சேரிக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே வந்தபோது, காரில் இருந்து திடீரென புகை வருவதை கண்ட அவர் சாலையோரமாக காரை நிறுத்தியுள்ளார்.
அவர் காரை நிறுத்தி சோதித்துக் கொண்டிருந்தபோதே, திடீரென காரின் முன் பகுதியில் இருந்து தீப்பிடித்து எரியத் துவங்கியது. மளமளவென எரிந்த தீ காரணமாக கடும் கரும்புகை எழுந்ததால் அவ்வழியாக வாகனங்களில் சென்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக பரங்கிமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீஸாரும் விரைந்து வந்தனர்.
தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
» சத்யராஜ், வசந்த் ரவியின் ‘வெப்பன்’ வெள்ளிக்கிழமை ஓடிடியில் ரிலீஸ்!
» கோவை, நெல்லை மேயர்களை தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு