ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த இரு பயங்கரவாதிகளை அம்மாநில போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கதுவாவின் பத்னோட்டா கிராமத்தில் ராணுவ வாகனத்தின் மீது கடந்த 8-ம் தேதி மறைவிடத்திலிருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், ஓர் அதிகாரி (ஜேசிஓ) உட்பட 5 படைவீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் காயமடைந்தனர். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்நிலையில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்களும், அந்த அமைப்பினருக்கு உணவு மற்றும் ஹாட்ஸ்பாட் தொடர்பை வழங்கி வந்தவர்களுமான இருவரை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறுகையில், “பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பில்லவர் தாலுகாவில் உள்ள கல்னா தனு பரோல் பகுதியைச் சேர்ந்த லயாகத் அலி மற்றும் கதுவா மாவட்டத்தின் மல்ஹர் தாலுகாவில் உள்ள பவுலி மொஹல்லாவைச் சேர்ந்த மூல் ராஜ் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் பயங்கரவாதிகளின் ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவுக்கு தகவல் பரிமாற்றம் மற்றும் கடந்த 8ம் தேதி தாக்குதலுக்குப் பின்னர், பயங்கரவாதிகளுக்கு தப்பிக்கும் பாதையை காண்பித்தும் உதவியுள்ளனர்" என்றார்.
» நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: கர்நாடகா சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்
» உ.பியில் இருந்து டெல்லிக்கு கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 17 வயது சிறுமி தற்கொலை
ஜூலை 8 பயங்கரவாத தாக்குதல் வழக்கு தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட நபர்கள் விசாரிக்கப்பட்டனர். மேலும், ஆபத்தை தணிக்கவும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவான அமைப்பை சீர்குலைக்கவும் 40-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளை ஒழிக்க 500 உயரடுக்கு பாரா கமாண்டோக்கள் மற்றும் மலைப்போர் பயிற்சி பெற்றவர்கள் உள்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை ராணுவம் அங்கு களமிறக்கியுள்ளது.