இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை: சிறுவன் உள்பட 4 பேர் மீது வழக்கு

By KU BUREAU

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், சிரோஹி மாவட்டத்தில் 19 வயது இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவன் உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம், சிரோஹி மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் மாயமானதாக அப்பெண்ணின் குடும்பத்தினர் கடந்த 19ம் தேதி அன்று ஸ்வரூப்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 21ம் தேதி அன்று, மாயமான பெண், தனது குடும்பத்தினரை தொடர்புகொண்டு, தான் உதய்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸார் மற்றும் பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக அங்கு சென்றனர். பின்னர் போலீஸார் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தியதில், சம்பவத்தன்று 4 பேர் தன்னை கடத்திச் சென்றதாகவும், அவர்களில் முதன்மை குற்றவாளியான நபர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பாதிக்கப்பட்ட இளம்பெண் தெரிவித்தார்.

மேலும், பாலியல் வன்கொடுமை செய்த பின்னர், அந்த இளம்பெண்ணை குற்றவாளிகள், கலு கல்பேலியா என்ற நபரிடம் விற்றதும் தெரியவந்தது. மறுநாள், கலு கல்பேலியா அந்த இளம்பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, அவர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், இளம்பெண் காயமடைந்ததைத் தொடர்ந்து அவர் உதய்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் பின்னரே அவர் தனது குடும்ப உறுப்பினர்களை அழைத்தது தெரியவந்தது. இதற்கிடையே இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் அவரை விற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக ஸ்வரூப்கஞ்ச் காவல் நிலைய அதிகாரி (எஸ்எச்ஓ) கமல் சிங் தெரிவித்தார். இந்த சம்பவம் சிரோஹி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE