வேலூர்: விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேருக்கு7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டையைச் சேர்ந்தஅரசுப் பள்ளி ஆசிரியர் சுகுமார் என்பவரது உடல், 2013-ல் தட்டாங்குட்டைஏரிப் பகுதியில் கிடந்தது. இது தொடர்பாக குடியாத்தம் கிராமிய போலீஸார் விசாரணை நடத்தி, தனியார் நிதி நிறுவனப் பங்குதாரர்களான குடியாத்தம் தரணி, செங்கொடியான் மற்றும் கோபி(எ) கோபால் (43) ஆகியோரை கைதுசெய்தனர்.
அவர்களை குடியாத்தம் நகர காவலர்குடியிருப்பில் சட்டவிரோதமாக அடைத்துவைத்து விசாரித்தனர். தொடர்ந்து, மேல்பட்டி காவல் நிலையத்தில் அவர்களிடம் விசாரித்தபோது, துணை ராணுவப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கோபி என்ற கோபால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, குடியாத்தம் உட்கோட்ட டிஎஸ்பி சுந்தரம், காவல்ஆய்வாளர் முரளிதரன், எஸ்எஸ்ஐ இன்பரசன், தலைமைக் காவலர் உமாசந்திரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
» இன்று தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சிக்கான திட்டங்கள்: அண்ணாமலை நம்பிக்கை
2017-ல் இந்த வழக்கு சிபி சிஐடி-க்குமாற்றப்பட்டது. இதில், சட்ட விரோதகாவலில் தரணி, செங்கொடியான்,கோபி ஆகியோர் போலீஸாரால் அடித்து துன்புறுத்தப்பட்டதும், தரணியின் கையில்எலும்பு முறிவு ஏற்பட்டதும் உறுதியானது. இந்த வழக்கு விசாரணை, வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி முருகன்,குற்றம் சுமத்தப்பட்ட காவல் ஆய்வாளர்முரளிதரன், எஸ்எஸ்ஐ இன்பரசன், தலைமைக் காவலர் உமாசந்திரன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் முரளிதரன், உமாசந்திரன் ஆகியோருக்கு தலா ரூ.1.70 லட்சம், இன்பரசனுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
ஆய்வாளர் முரளிதரன் வேலூர் கலால் பிரிவு ஆய்வாளராகவும், உமாசந்திரன்பரதராமி காவல் நிலையத்தில் தலைமைக்காவலராகவும் பணியாற்றி வருகின்றனர். இன்பரசன் எஸ்எஸ்ஐ-ஆக பணியாற்றி, ஓய்வு பெற்றுள்ளார். தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரும் நேற்று வேலூர்மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்