டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் தலைநகரை மீண்டும் பரிதவிக்க வைத்திருக்கிறது.
அமில தாக்குதல் தொடர்பாக சிசிடிவியில் பதிவான காட்சிகள் இணையத்தை உலுக்கி வருகின்றன. மேற்கு டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் இன்று(டிச.14) காலை 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஆள் நடமாட்டம் அதிகம் இருப்பதன் மத்தியில் பள்ளி செல்லும் மாணவியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
17 வயது மாணவி தனது 13 வயது தங்கையுடன் சாலையின் ஓரமாக செல்லும்போது, எதிரில் முகமூடி அணிந்த 2 ஆண்கள் வந்த பைக் ஒன்று வேகம் குறைக்கிறது. அதில் ஒருவன் பாட்டிலில் கொண்டு வந்த அமிலத்தை 17 வயது மாணவியின் முகத்தை குறிவைத்து வீசியதும் பைக் விரைந்து மறைகிறது. அமில தாக்குதலுக்கு ஆளான மாணவி தனக்கு என்ன நேர்ந்ததென்றே அறியாது வலியால் துடிக்கிறார்.
அருகில் இருந்தோர் முகத்தில் நீர் ஊற்றி அமில பாதிப்பை குறைக்க முயன்றனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி உடனடியாக சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முகத்தில் வீசப்பட்ட அமிலம் கண்களை உள்ளிட்ட முகத்தை பாதித்திருக்கிறது. அமில வீச்சு பாதிப்பின் ஆழம் 2 நாட்கள் கடந்தபிறகே தெளிவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிசிடிவி பதிவுகளை வைத்து, அமில வீச்சியில் ஈடுபட்ட இருவரில் ஒருவனை டெல்லி போலீஸார் விரைந்து கைது செய்தனர். இணையத்தில் பரவிய அமில வீச்சு காட்சி பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி இருக்கிறது. தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணையில் இறங்கியிருக்கிறது. மேலும், அமிலத்தின் சில்லறை விற்பனைக்கு தடை விதிக்குமாறும், அமில வீச்சில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான தண்டனைகளை அறிவிக்குமாறும் பொதுமக்கள் மத்தியில் குரல்கள் எழுந்துள்ளன.