நீதிமன்றத்தில் பிளேடால் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி

By காமதேனு

நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான கைதி நீதிபதி முன்பு பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரிட்ட இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அயனாவரம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த ரவுடி சங்கர் என்கிற சங்கர்பாய்(28). ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக சில வாரங்களுக்கு முன்பு கோவை போலீஸார் சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கொளத்தூர் காவல் நிலையத்தின், ரவுடி சங்கருக்கு எதிரான 2014-ஆம் ஆண்டின் கொள்ளை வழக்கின் விசாரணை எழும்பூர் நீதிமன்றத்துக்கு வந்தது.

இதனையடுத்து கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சங்கரை, இன்று மதியம் எழும்பூர் 13-வது நீதிமன்ற நீதிபதி முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணை தேதியை ஒத்திவைத்து உத்தரவிட்டார். உடனே சங்கர் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். நீதிபதி முன்பாகவே நேரிட்ட இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் சங்கரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படு வருவதாவும், அவர் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த எழும்பூர் போலீஸார், சங்கரிடம் விசாரணை நடத்தினர். கோவை சிறையில் இருந்து சென்னைக்கு அழைத்து வரும் வழியில் செங்கல்பட்டு அருகே உணவருந்த சென்ற போது, அங்கிருந்த பிளேடை சங்கர் எடுத்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்ததால் ஆத்திரமுற்ற சங்கர், பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

காவல்துறையினர் தன் மீது பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், தன்னுடன் சிறைக்கு சென்ற கைதிகள் அனைவரும் பிணையில் வெளியே சென்று விட்ட நிலையில் தனக்கு மட்டும் நீதிமன்ற பிணை கிடைக்கவில்லை என்றும் சங்கர் வருத்தம் தெரிவித்திருக்கிறார். கோவை சிறையில் தன்னை சித்திரவதை செய்வதாகவும் மீண்டும் கோவை சிறையில் அடைத்தால் காவல்துறை வாகனத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்றும் சங்கர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட சிறைக்கைதி நீதிபதி முன்பாக நடந்துகொண்ட விதம் குறித்து எழும்பூர் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE