மதுரை நகைக்கடை ஒன்றில் கவரிங் நகையை வைத்துவிட்டு தங்கநகையோடு ஓட்டமெடுத்த தாய், மகளை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் பிரபலமான துணிக்கடை ஒன்று உள்ளது. அந்த கடைக்குள்ளேயே தங்க நகை விற்பனைப் பிரிவு, கவரிங் நகைகள் விற்பனைப் பிரிவும் உள்ளது. அதில் தங்கநகை விற்பனைப் பிரிவில் நேற்றுமாலை திடீரென ரூ.2.10 லட்சம் மதிப்பிலான 5 பவுன் நகை மாயமாகி இருந்தது. இது குறித்து துணிக்கடை தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில், மாட்டுத்தாவணி போலீஸார் அந்தக் கடையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதன் வாயிலாக செக்கானூரணி, பன்னியான் ரோட்டைச் சேர்ந்த சுமதி(50), பிரியத்ர்ஷினி(28) ஆகியோர் நகையை திருடியதைக் கண்டுபிடித்தனர். இவர்கள் இருவரும் தாய் - மகள் ஆவர். இவர்கள் பர்தா அணிந்து இந்தக் கடைக்கு வந்திருக்கின்றனர். முதலில் ஐவுளிக்கடைக்குப் போய் கவரிங் நகைகள் பிரிவில் கவரிங் செயினை வாங்கிவிட்டு, அதைப்போலவே இருக்கும் தங்க செயினைத் தேடி தங்கநகை பிரிவுக்கு வந்தனர். அங்கு திட்டமிட்டபடி கவரிங் செயினை வைத்துவிட்டு தங்கநகையோடு நழுவினர். இந்த 2 பெண்கள் மீதும் ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் இருந்ததால், போலீஸார் அவர்களை விரைந்து கைது செய்யவும் முடிந்தது.