சிவகங்கை அருகே கரும்பு வயலில் கவிழ்ந்த அரசுப் பேருந்து: 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

By KU BUREAU

சிவகங்கை: மதுரையிலிருந்து, சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பச்சேரி அருகே கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூர் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று இன்று சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தில் 10-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக தெரிகிறது. இந்நிலையில் இந்தப் பேருந்து பச்சேரி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென பேருந்தின் 'ஸ்டியரிங் என்ட்' துண்டித்து, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கரும்பு வயலுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த ஓட்டுநர், நடத்துநர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனைக் கண்ட அப்பகுதியினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதையடுத்து காயமடைந்தவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சமீப காலமாக முறையான பராமரிப்புகளின்றி அரசுப் பேருந்துகள் தொடர்ந்து விபத்துகளில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க, பழுதடைந்த அரசுப் பேருந்துகளை முறையான பராமரிப்பு செய்து இயக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE