நோயைக் குணப்படுத்த மாந்திரீகம்: இளம்பெண் தலைக்குள் 18 ஊசிகளைச் செலுத்திய தந்திரி கைது!

By KU BUREAU

ஒடிசா: நோயைக் குணப்படுத்துவதாகக் கூறி 19 வயது இளம்பெண் தலைக்குள் 18 ஊசிகளைச் செலுத்திய தந்திரி கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவத்துறை எவ்வளவோ முன்னேறியும் மக்களிடம் மூடநம்பிக்கைகள் இன்னும் குறையவில்லை. உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்குச் சென்று முறையான சிகிச்சை பெறாமல், மந்திரவாதி, தந்திரிகளை நாடுகின்றனர். இதனால் உடல்நிலை மேலும் மோசமாகிறது. அப்படியொரு சம்பவம் ஒடிசாவில் நடைபெற்றுள்ளது.

ஒடிசாவில் உள்ள பலங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் நான்கு ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவ சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் தந்திரி சந்தோஷ் ராணா என்பவரை நாடினர். அவர் இளம்பெண்ணின் தலையில் பல ஊசிகளை செலுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, ஆபத்தான நிலையில் இருந்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது தலைக்குள் ஊசிகள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். என் மகளின் தலையில் இருந்து எட்டு ஊசிகள் அகற்றப்பட்டன என்று அவரது தந்தை கூறினார். மேலும் 10 ஊசிகள் அவரது தலையில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த நேரத்தில் அந்தப் பெண் சுயநினைவின்றி இருந்தார். அதனால் அவரது தலையில் ஊசி இருப்பது பற்றி சொல்ல முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீஸில் புகார் செய்ததையடுத்து, தந்திரி ராணாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சிகிச்சை முறைகள் நோயாளிகளின் உடல்நிலையை ஆபத்திற்குள்ளாக்கும். எனவே இத்தகைய சந்தர்ப்பங்களில் தகுதியான மருத்துவ உதவியை நாடுவது நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE