குஜராத்தில் பள்ளி வகுப்பறை சுவர் இடிந்து விபத்து: நொடியில் உயிர் தப்பிய மாணவர்கள்; அதிர வைக்கும் சிசிடிவி காட்சி

By KU BUREAU

வதோதரா: குஜராத்தில் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருந்தபோது, சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு மாணவர் காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

குஜராத் மாநிலம், வதோதரா நகரில் வகோடியா சாலையில் உள்ள ஸ்ரீ நாராயண் வித்யாலயா என்ற அறக்கட்டளை நடத்தும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பால்கனி இடிந்து விழுந்ததில் ஒரு மாணவர் காயமடைந்தார்.

நேற்று மதியம், உணவு இடைவேளையின்போது, வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது வகுப்பறையின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சுவர் ஓரத்தில் அமர்ந்திருந்த மாணவர், மற்றும் சில மாணவர்கள் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அதே நேரத்தில் வகுப்பில் இருந்த மற்ற மாணவ, மாணவிகள் உடனடியாக வெளியே ஓடிவந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வதோதரா தீயணைப்பு வீரர்கள் பள்ளிக்குச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

இதுகுறித்து பள்ளி முதல்வர் ரூபால் ஷா கூறுகையில், "ஒரு பயங்கர சப்தம் கேட்டது. உடனடியாக அங்கு ஓடிச்சென்று பார்த்தோம். அப்போது சுவர் இடிந்து கீழே விழுந்ததில் ஒரு மாணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. நாங்கள் உடனடியாக மற்ற மாணவர்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றினோம்.

மாணவர்களின் சைக்கிள்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சுவர் விழுந்தது. இதில், பல சைக்கிள்களும் சேதமடைந்தன” என்றார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE