கும்பகோணம்: வழிபறியில் ஈடுபட்ட ராணுவவீரர் சிறையிலடைப்பு!

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணத்தில் வழிபறியில் ஈடுபட்ட ராணுவ வீரரையும், அவரது பள்ளி நண்பரையும் போலீஸார் கைது சிறையிலடைத்தனர்.

கும்பகோணம் மாநகரப்பகுதிகளில் அண்மைக்காலமாக நடந்து செல்லும் பெண்களிடம் வழிபறி நடப்பது அதிகரித்து வந்தது. இது தொடர்பாக, அவர்கள் காவல் நிலையங்களில் புகாரளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, மேற்கு காவல் ஆய்வாளர் ஜகதீசன் தலைமையில் தனிப்படை எஸ்ஐ கீர்த்திவாசன் மற்றும் போலீஸார் அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவுகளைக் கண்காணித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், திரிபுரா மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வரும் கும்பகோணம், முத்துப்பிள்ளை மண்டபம், வடக்குத் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் வசந்த்(26) மற்றும் இவரது பள்ளி நண்பனான கும்பகோணம், நீடாமங்கலம் பிரதானச் சாலையைச் சேர்ந்த செல்வக்குமார் மகன் சிவா(25) ஆகிய 2 பேர் இந்த வழிபறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து போலீஸார், மயிலாடுதுறை சிறையில் இருந்த அவர்களை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு, அவர்களிடம் இருந்து 112 கிராம் தங்க நகைகளைப் பறிமுதல் செய்து, மீண்டும் மயிலாடுதுறை சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக போலீஸார் கூறியது: “மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் போலீஸார் அங்குள்ள எஸ்ஐ மனைவியுடம் தங்கச் செயினை வழிபறி செய்தது தொடர்பாக அங்குள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு கும்பகோணத்திற்கு வந்து, வசந்த் மற்றும் சிவாவைக் கைது செய்து மயிலாடுதுறை சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, கும்பகோணம் பகுதியில் அண்மைக்காலமாக நடைபெற்ற வழிபறி தொடர்பாக அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா கண்காணித்து அவர்களைத் தேடி வந்தோம்.

அதில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்ட போது குத்தாலம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்த அவர்கள் 2 பேர் எனத் தெரிய வந்தது. இதையடுத்து, மயிலாடுதுறை சிறையில் இருந்த அவர்கள் 2 பேரையும் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு, அவர்களிடம் இருந்த 112 கிராம் தங்க நகைகளை மீட்டு, மீண்டும் அதே சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், சிறையிலடைக்கப்பட்ட ராணுவ வீரர் வசந்தும், சிவாவும் பள்ளி நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வசந்த் ஒவ்வொரு முறை விடுமுறைக்கு வந்து விட்டு மீண்டும் பணிக்கு செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு சிவாவுடன் சேர்ந்து வழிபறியில் ஈடுபட்டு, உடனே ரயில் மூலம் ராணுவ பணிக்கு சென்று விடுவார். இதனால் அவர்களைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. அண்மையில், வசந்த் மீது சந்தேகமடைந்த போலீஸார், அவர்கள் இருப்பிடத்திற்குச் சென்ற விசாரித்து போது, அவர் மிகவும் நல்லவர் எனக் கூறியதால் அவரைக் கைது செய்ய தாமதமானது” எனத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE