9 வயது சிறுமி உட்பட 20 மனைவியர்: பாலியல் சாமியார் கைது

By காமதேனு

20 மனைவிகளுடன் படோடபமாய் உலாவிய சாமியார் ஒருவரை அமெரிக்க எஃப்பிஐ பொறி வைத்துப் பிடித்திருக்கிறது. இந்த மனைவியரில் பெரும்பாலானோர் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், அவர்களில் ஒரு சிறுமிக்கு வயது 9 என்றும் தெரிய வந்திருக்கிறது.

அடிப்படைவாதத்தின் பெயரால் அயோக்கியத்தனங்களை அரங்கேற்றும் பேர்வழிகள் எல்லா மதங்களிலும் நிறைந்திருக்கிறார்கள். இறை மற்றும் மத நம்பிக்கையின் பேரில் பக்தர்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் இவர்கள் அவ்வப்போது சிக்குவதும் உண்டு. அப்படி அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில், சாமுவேல் ரேப்பிலி பேட்மேன் என்ற 46 வயது சுயம்பு சாமியார் சிக்கியிருக்கிறார். கிறிஸ்துவ மதத்தின் அடிப்படைவாத குழு ஒன்றின் போர்வையில், இறைத்தூதர் என்றும் உலக மக்களை ரட்சிக்க வந்ததாகவும் தன்னைத்தானே பிரபலப்படுத்தி இருக்கிறார். இவருக்கு கணிசமான பக்தர்களும் உண்டு.

செப்டம்பரில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ பிடியில் ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக சாமுவேல் பிடிபட்டார். தொடர் விசாரணையில் அவரது சர்ச்சைக்குரிய மத நடவடிக்கைகளுக்கு அப்பால், எந்த புகாரும் எழவில்லை. எனவே புலனாய்வு அதிகாரிகள் களமிறங்கி தடயங்களை திரட்ட தொடங்கினர். அந்த வகையில் அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன.

சாமுவேல் பேட்மேன்

கிறிஸ்துவ மதத்தின் அடிப்படைவாத குழுக்களை இணைக்கும் கண்ணியாகவும், விநோதமான மத நம்பிக்கையாளராகவும் தெரிய வந்த சாமுவேல், சகலத்துக்கும் பாலியலை பயன்படுத்தியே காரியம் சாதித்து வந்திருக்கிறார். இவரது 20 மனைவியரில் பெரும்பாலானோர் சிறுமிகள். அவர்களில் ஒருவருக்கு வயது 9. கரோனா காலத்தில் சொந்த மகளை திருமணம் செய்ய முயன்றும் சாமுவேல் சிக்கியிருக்கிறார். தனக்கு எதிரான புகார்கள் அனைத்தையும் பாலியல் அஸ்திரம் கொண்டே தணித்திருக்கிறார்.

தந்த்ரா உபாயங்கள் உட்பட பாலியலையும், ஆன்மிகத்தையும் சரிவிகிதத்தில் கலந்து ஆன்மிக மற்றும் அதிகார பீடங்களை கட்டமைத்த சாமியார்களை பார்த்திருக்கிறோம். ரஜனீஷ் முதல் நித்யானந்தா வரை இதற்கான உதாரணங்கள் நீளும். சாமுவேலும் அதே பாணியில் தனது ஆன்மிக நடவடிக்கைகளில் கவர்ச்சிகரமாக பாலியலை கலந்திருக்கிறார். அப்படி ஈடுபடுத்தப்படும் பெண்கள் அனைவரும் பதின்ம வயதினர் என்பதும், அந்த வகையில் சிறுமிகள் ஆட்கடத்தலுக்கு ஆளானது மற்றும் குழு பாலியல் நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்தியது ஆகியவற்றுக்கான ஆதாரங்கள் தற்போது சேகரிக்கப்பட்ட்டுள்ளன.

சாமுவேலின் 20 மனைவியர் மட்டுமன்றி 50க்கும் மேலான தீவிர சிஷ்யர்களையும் வளைத்து எஃப்பிஐ விசாரித்தது. மூளைச்சலவைக்கு ஆளானோராக அந்த அனைவரும் சாமுவேலுக்கு ஆதரவாகவே வாக்குமூலம் அளித்து வருகின்றனர். அதன் பின்னர், ஆவணப்படம் ஒன்றுக்காக சாமுவேல் உளறிவைத்த பேட்டிகளில் இருந்து அவரது கும்பலுக்கு எதிரான தடயங்களை திரட்டிய எஃப்பிஐ, தற்போது அனைவரையும் மொத்தமாக முடக்கியுள்ளது.

சிறார் பாலியல், போதைக்கடத்தல், தீவிரவாத குழுக்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் நெருங்கிய வலைப்பின்னல் இருக்கும் என்பதால் சாமுவேல் பின்னணியை மேலும் தீவிரமாக எஃப்பிஐ துழாவி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE