இரவுதோறும் ஒரு பெண்ணை அழைத்து வந்து உல்லாசமாக இருக்கும் அப்தாப், நள்ளிரவு நெருங்கும்போது வேறு வேலையிருப்பதாக அந்தப் பெண்களை வெளியேற்றி விடுவான். ’பம்பிள்’ (Bumble) என்ற டேட்டிங் செயலியில் பழகிய பெண்களை அப்படி வரவழைத்து சுகிப்பவன், அவர்கள் சென்றதும் ஃப்ரிட்ஜில் காத்திருக்கும் ஷ்ரத்தா சடலத்தின் துண்டுகளை தினம் ஒன்றாக புறநகரின் ஆளரவமற்ற புதர்களில் வீசி திரும்புவான். அப்தாப்புக்கு ஷ்ரத்தா அறிமுகமானதுகூட பம்பிள் ஆப் மூலம்தான்.
நாட்டையே கிடுகிடுக்க வைத்த டெல்லி ஷ்ரத்தா கொலையின் பின்னே, அப்தாப் பூனாவாலா என்ற அரக்கன் மட்டுமல்ல டேட்டிங் ஆப் (Dating App) என்ற பூதமும் ஒளிந்திருக்கிறது.
பரந்த இந்திய சந்தை
முந்தைய தலைமுறையினர் மத்தியில் அதிகம் அறியப்படாத இந்த டேட்டிங் ஆப்ஸ், தற்போதைய இளசுகள் மத்தியில் தீயென பரவியிருக்கிறது. அதிலும் கரோனா பரவல் காரணமாக தனிமையில் முடங்கியவர்கள் மத்தியில், வழக்கமான எதிர்பாலின ஈர்ப்பு பெரும் வெடிப்பாக உருவெடுத்ததில், டேட்டிங் செயலிகள் 2020-ல் வரலாறு காணாத போக்குவரத்தை எதிர்கொண்டன. அதுவே தற்போது புற்றீசலாக பெருகியிருக்கும் இதர செயலிகளுக்கும் காரணமாயின.
மணவாழ்வில் கைகோக்கும் முடிவை பரிசீலிக்கும் உபாயமாக சில காலம் பழகிப் பார்க்கும் டேட்டிங் அனுபவம் இளம் வயதினருக்கு பூரிப்பு அளிப்பது. அதிலும் திருமணம் தேவையில்லை; தற்போதைக்கு ஜாலியாக பழகுவோம் என்பவர்களுக்கு, இந்த டேட்டிங் ஆப்ஸ் ரகங்கள் வரப்பிரசாதமாகி இருக்கின்றன. வட இந்தியாவின் ’பம்பிள்’ முதல் தமிழில் வளையவரும் ’அன்பே’ வரை நூற்றுக்கும் மேலாக பெருகியிருக்கும் இந்திய ஆப்ஸ் அனைத்தும் ’டின்டெர்’(Tinder) என்ற அமெரிக்க டேட்டிங் செயலியின் தாக்கத்திலேயே உருவாயின.
2012-ல் அமெரிக்காவுக்கு வெளியே டின்டெர் நிறுவனம் கால்பரப்பிய முதல் கிளை அலுவலகம் டெல்லியில் நிலைகொண்டதில், டேட்டிங் ஆப் என்பதற்கான இந்திய சந்தையை பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கண்டுகொண்டன. அப்படி மழைக்காளானாய் முளைத்த டேட்டிங் ஆப்ஸ் மத்தியில் இளசுகளை கவர்ந்திழுப்பதில் போட்டி மூண்டது. அந்த மும்முரத்தில் தங்களை நம்பிய பயனர்களின் பாதுகாப்பு அம்சங்களில் கோட்டை விட்டனர்.
இதன் விளைவாக சகல இணைய மோசடிகளும் டேட்டிங் செயலிகளுக்கு தாவின. பணப்பறிப்பு, பிளாக்மெயில், பாலியல் பலாத்காரம் என பலவகையிலும் பெண்களை குறிவைத்து வலைவிரித்தது அதிகமானது. அப்தாப் போன்று தோற்றத்தில் தன்மையும், பவிசும் கூடிய ஆண்கள், ஷ்ரத்தா போன்ற பெண்களை எளிதில் வளைப்பதற்கும் இந்த டேட்டிங் செயலிகள் வழி செய்தன.
கட்டணக் கொள்ளை, பறிபோகும் ப்ரைவஸி
டேட்டிங் செயலிகளில் பல வகையுண்டு. கட்டண திட்டங்களுக்கு ஏற்றவாறு பல கட்டங்களில் அவற்றின் அனுகூலங்கள் கிட்டுவதுண்டு. மூன்றாம் நபரின் மோசடிக்கு ஆளாவதற்கு முன்னரே, செயலி நிறுவனமே பயனர்களிடம் வழிப்பறிக்கு நிகரான கட்டணக் கொள்ளையை தொடங்கி விடும். சுய விவரம், புகைப்படம், ரசனை, விருப்பம் எல்லாம் பதிவு செய்தால், பயனர் எதிர்பார்க்கும் நட்பு பட்டியலை தளம் காண்பிக்க வேண்டும். ஆனால், அதற்கான சேவையின் பல கட்டங்களை பட்டியலிட்டு ஒவ்வொன்றுக்கும் தனியாக பணத்தை கறப்பதுடன், பிறருக்கு தமது இருப்பை எடுத்துக்காட்டவும் பயனர் தனியாக அழவேண்டும்.
விரும்பிய எதிர்பால் பயனர்களின் புரொஃபைல் பார்த்து விருப்பக்குறி மற்றும் இதயங்களை பறக்கவிட்டபடி தேவுடு காத்திருக்க வேண்டும். எதிர் தரப்பிலிருந்தும் அதே முறைவாசல் கிடைத்தால் மட்டுமே இருவருக்குமான பிரத்யேக சாட் பாக்ஸ் திறக்கும். அங்கே உரையாடி, உள்ளக்கிடக்கையை பரிமாறி, அவசியமானால் நேரடி சந்திப்பு வரை முன்னேறுகிறார்கள். இப்படி ஒத்த சித்தமுள்ளவர்களை ஒருங்கிணைக்கும் தரகு தளமாக டேட்டிங் செயலி மெனக்கிடுகிறது. இன்னும் சில செயலிகள் ஒத்த ரசனைக்குரியவர்கள் உங்களைக் கடந்து சென்றாலே நோட்டிஃபிகேஷனில் கண்ணடிக்கும். இதற்கு இருதரப்பினரும் குறிப்பிட்ட செயலியை மொபைலில் நிறுவியிருப்பதுடன், ஜிபிஎஸ் வசதியை ஆன் செய்தும் வைத்திருக்க வேண்டும்.
இந்த ஜிபிஎஸ் மட்டுமன்றி சில செயலிகள் கோரும் கேலரி மற்றும் எஸ்எம்எஸ் பார்வைக்கும் இணங்கும்போது, தனிப்பட்ட தரவுகள் மற்றும் அந்தரங்கம் களவு போகும் அபாயத்துக்கும் வாய்ப்பாகும். டேட்டிங் செயலி உலாவலுக்கு இணையம் மற்றும் அலைபேசி தேவைகளே அடிப்படை என்பதால், பெருநகரங்களில் மட்டுமே வியாப்பித்திருந்த இந்த செயலிகளின் அனுகூலங்கள் இப்போது அடுத்த கட்ட நகரங்களையும் சிற்றூர்களையும் பீடித்து வருகின்றன. இந்த டேட்டிங் செயலிகளின் கட்டணக் கொள்ளை மற்றும் ப்ரைவஸி அச்சுறுத்தலுக்கு அடுத்தபடியாக, அதில் சஞ்சரிக்கும் ஒவ்வொரு திருப்பத்திலும் வேறு வகையிலான அபாயங்கள் மறைந்திருந்து அச்சுறுத்தும்.
இஸ்ரேல் சைமன், ஜெய்ப்பூர் ப்ரியா
அழுத்தும் தனிமையிலிருந்து விடுபட மெய்யாலுமே நட்பை எதிர்பார்ப்போர், பரஸ்பரம் உணர்வையும் அன்பையும் பகிர்ந்து மெய்நிகரில் தோள்சாய விழைவோர் என மெல்லிதயம் துடிக்க எட்டிப்பார்க்கும் இளசுகள், மோசடிப் பேர்வழிகளுக்கு சுலபத்தில் இலக்காகிறார்கள். இத்துடன் இளம்பருவத்துக்கே உரிய த்ரில், சாகசம் என அலைபாயல் அதிகம் கொண்டவர்களும் எளிதில் உணர்ச்சி வசப்படுவோர், பாலியல் வறட்சிக்கு ஆளோனோரும் வலிய விட்டிலாகிறார்கள்.
இவர்களுக்காக, போலி கணக்கு, பொய்யான புரொஃபைல், சாக்லேட் வாசகங்களுடன் முகமூடி பேர்வழிகள் காத்திருப்பர். அபிமானத்துக்கு ஆளானதும் சிறிதும் பெரிதுமாக வங்கி இருப்பை குறிவைப்பது, தனிப்பட்ட தரவுகளை பெற்று பெரும் மோசடிக்கு அடியெடுப்பது என நிதானமாக முன்னேறுவார்கள். வலையில் விழும் பெண்களை மிரட்டி பாலியல் தூண்டிலாய் தங்கள் இதர நோக்கங்களுக்கு பயன்படுத்தும் கும்பல்களும் இங்கே அதிகம். வளர்ந்த நாடுகள் உட்பட, உலகளவில் பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவரே டேட்டிங் செயலிகளில் அதிகம் சிக்கி சின்னாபின்னமாகிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட ’தி டின்டெர் ஸ்விண்ட்லர்’(The Tinder Swindler) என்ற க்ரைம் டாக்குமென்ட்ரி, டேட்டிங் ஆப் என்பதன் கோர மறுபக்கத்தை தோலுரித்தது. இஸ்ரேலை சேர்ந்த சைமன் என்ற மோசடி மன்னன் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வர பெண்களை குறிவைத்து ஏமாற்றியதை பாதிக்கப்பட்ட பெண்களே பரிதாபமாக விவரித்திருப்பார்கள். ’டின்டெர்’ டேட்டிங் செயலியில் களமாடியதன் மூலமே சைமன் சகலத்தையும் சாதித்திருப்பான். இதே டின்டெரில் பெண்களிடம் ஏமாந்த ஆண்களும் உண்டு. ஜெய்ப்பூரில் உயிரை விட்ட துஷ்யந்த் சர்மா இதற்கான அவல உதாரணம்.
ப்ரியா சேத் முகத்தை பார்ப்பவர்கள் இந்தப் பெண்ணா ஆயிரத்துக்கும் அதிகமான ஆண்களை திட்டமிட்டு ஏமாற்றியது என்று வாய் பிளப்பார்கள். நம்பவைத்து பணம் பறிப்பது, பாலியல் வலையில் வீழ்த்தி பிளாக்மெயில் செய்வது, போலி கற்பழிப்பு புகார்கள் உள்ளிட்டவை ப்ரியா சேத்தின் பிரபல உத்திகள். கல்லூரியில் படிக்கும்போது கைச்செலவுக்காக இணையத்தின் சாட்டிங் குழுக்களில் இப்படி மோசடி வலை விரித்தவள், டேட்டிங் ஆப் டின்டெரின் அறிமுகம் கிடைத்ததும் அதற்கு மாறினாள். அங்கே ப்ரியா சேத் அழகில் மயங்கியும், கொஞ்சும் குரலில் கிறங்கியும் ஏராளமான ஆண்கள் லட்சங்களில் பணத்தை இழந்தனர்.
அந்த வரிசையில் தன்னை பெரும் தொழிலதிபராக காட்டிக்கொண்ட துஷ்யந்த் சர்மாவுக்கும் ப்ரியா வலை விரித்தாள். செயலி வழியாக பல நாள் பழகி நேரடி சந்திப்புக்கும் ப்ரியா சேத் நாள் குறித்தாள். அந்த சந்திப்பில் துஷ்யந்த் பணக்காரன் இல்லை என்று தெரிய வந்ததும் கோபமுற்ற ப்ரியா, கூட்டாளிகளுடன் சேர்ந்து துஷ்யந்தை சித்திரவதை செய்து கொன்றாள். ஒரு சூட்கேஸில் சடலத்தை அடைத்து ஜெய்ப்பூர் - டெல்லி சாலையில் வீசிச் சென்றதில் 2018-ல் போலீஸிடம் சிக்கினாள்.
டின்டெர் வாயிலாக மட்டுமே எட்டாண்டுகளில் பல்லாயிரம் ஆண்களை ஏமாற்றியிருப்பதாக ப்ரியா வாக்குமூலம் அளித்தபோது போலீஸார் கிறுகிறுத்துப் போனார்கள். அத்தனை ஏமாளி ஆண்களும் செழிப்பானவர்கள் என்பதால், வெளியில் சொன்னால் வெட்கக்கேடு என பணத்தை பறிகொடுத்ததோடு பம்மியிருக்கிறார்கள். துஷ்யந்த் கொலையில் ப்ரியா சிக்காதிருந்தால், அவளது டின்டெர் ஏமாற்று படலத்தில் இன்னும் சில ஆயிரம் ஆண்கள் சேர்ந்திருப்பார்கள்.
தயக்கமும் மயக்கமும்
எதிர்பாலினத்தை எதிர்கொள்வதிலும், தனக்கான இணையை தேர்ந்தெடுப்பதிலும் நவீன இளம் சமூகம் விநோதமான பரீட்சாத்தங்களில் இறங்கிவருகிறது. நேரிடையான சந்திப்பைவிட ஆன்லைன் கூடல்களே அவர்களுக்கு ஆசுவாசமும், அவகாசமும் அளிக்கின்றன. நடப்பு திருமண பந்தங்களும் அவற்றின் வாயிலான நிதர்சன நெருக்கடிகளும், அதில் இறங்குவதில் இளம் தலைமுறையினருக்கு தயக்கம் தருகின்றன. இந்த தயக்கத்துடன், வயதுக்குரிய மயக்கத்திலும் சிக்குவோருக்கு ஆன்லைன் சிநேகம் ஆபத்பாந்தவனாகிறது. குறிப்பாக, இணையை தேர்வு செய்வதில் வாய்ப்பு அதிகம் மறுக்கப்படும் பெண்கள் தரப்பில் தற்காலிக ஆன்லைன் சந்திப்புகளை விரும்புவது அதிகரிக்கிறது. அளவான அளவளாவலோடு சுதாரிப்பாக கத்தரித்து விடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அந்த மெய்நிகர் சந்திப்பில் மயங்கி நிஜத்துக்கு அவற்றை நீட்டிக்கும்போது பெரும்பாலானோர் ஏமாற்றத்துக்கும், மோசடிக்கும் ஆளாகிறார்கள்.
ஷ்ரத்தா கொலையிலும் அது நடந்திருக்கிறது. டேட்டிங் செயலியில் அப்தாப் முன்வைத்த போலியான அடையாளங்களில் கிறங்கிய ஸ்ரத்தா, நிதர்சனத்தில் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகி இருக்கிறார். அதன்பின் அவனுடன் கைகோத்து முன்செல்லவும் முடியாது பின்வாங்கவும் வழியின்றி பரிதாபமாக செத்திருக்கிறார். ஷ்ரத்தாவின் அவல முடிவு பல பெண்களுக்கு பாடமாகி இருக்கிறது. ஏராளமானோர் தாங்கள் புழங்கிய டேட்டிங் செயலியிருந்து வெளியேறுவதாக சமூக ஊடகங்களில் அறிவித்து வருகின்றனர்.
இளசுகளின் இந்த வைராக்கியம் சில வாரங்களில் கரைந்துவிடக்கூடியது. எனவே நவீன யுகத்துக்கான படிக்கட்டுகளை இடிக்காது அவற்றை திடமாகவும் பயனுள்ள வகையிலும் கட்டமைக்கும் பொறுப்பில் சமூகமும், அரசும் அதிகம் பங்களிக்க வேண்டும். காவல்துறையின் சைபர் செல்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, சைபர் புகார்களை விரைந்து செவிமெடுத்து தீர்வு காண்பது, ஆன்லைனில் அத்துமீறுவோரை சட்டப்படி தண்டிப்பதற்கான புதிய சட்டதிருத்தங்களை மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டேட்டிங் செயலிகள் தங்கள் பயனர்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்துவது, பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை அபகரிப்பதும் அவற்றை விளம்பரதாரருக்கு விற்பதையும் முறைப்படுத்துவது எனவும் மாற்றத்துக்கான பாதை நீண்டிருக்கிறது.
டேட்டிங் ஆப் என்பதன் முழு வடிவத்தையும் நோக்கத்தையுமே ஜீரணிக்க முடியாத மூத்த தலைமுறையினர் மத்தியில் இதெல்லாம் சாத்தியக் குறைவாகலாம். நவீனத்தின் அம்சங்களை அப்படி முழுமையாக நிராகரிக்கும்போது, அவை வெவ்வேறு திசைகளிலிருந்து மென்மேலும் தீவிரமாக தனது கெடுதலைப் பாய்ச்சும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.