அசாமில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர் ஒருவர் சரியாக படிக்கவில்லை என பெற்றோரிடம் தெரிவித்த ஐந்து மாத கர்ப்பிணி ஆசிரியையை பல மாணவர்கள் சேர்ந்துக்கொண்டு தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் நடந்த பெற்றோர் ஆசிரியர் கவுன்சில் (PTC) கூட்டத்தின் போது, ஐந்து மாத கர்ப்பிணி ஆசிரியை ஒரு மாணவரின் மோசமான கல்வித் திறன் மற்றும் பள்ளியில் மோசமான நடத்தை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இதனையடுத்து, சில மாணவர்கள் சேர்ந்துகொண்டு அந்த ஆசிரியையை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக பேசிய பள்ளியின் துணை முதல்வர் ரதீஸ் குமார், “ ஞாயிற்றுக்கிழமை நடந்த பெற்றோர் ஆசிரியர் கவுன்சில் கூட்டத்தில் கர்ப்பிணி வரலாற்று ஆசிரியை ஒரு குறிப்பிட்ட மாணவனின் மோசமான கல்வித் திறனைப் பற்றி பெற்றோரிடம் தெரிவித்ததார். இதனால் கூட்டத்திற்குப் பிறகு, சில மாணவர்கள் ஒரு குழுவாக சேர்ந்துகொண்டு பள்ளி வளாகத்தில் அந்த ஆசிரியயை துன்புறுத்தத் தொடங்கினர். மாணவர்களின் சிலர் அவரைத் தள்ளினர், ஒரு மாணவர் அவரது தலைமுடியைப் பிடித்து இழுக்க முயன்றார். மாணவர்களின் கும்பல் தாக்குதலில் இருந்து சில பெண் ஆசிரியைகள், பள்ளி ஊழியர்கள் மற்றும் சில பெண் மாணவிகள் அவரைக் காப்பாற்றினர்
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அவர், ஏற்கனவே கர்ப்பம் காரணமாக சில சிக்கல்கள் இருந்ததால், உடனடியாக ஒரு பெண் உதவியாளருடன் பள்ளி காரில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். எங்கள் விசாரணையில், 10 மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் 22 மாணவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதை நாங்கள் கண்டறிந்தோம். மறுநாள் காலை எனது வீட்டில் அவசரக் கூட்டம் நடத்தி அவர்களின் பெற்றோரை அழைத்தேன். இதனை அறிந்த மாணவர்கள் என்னை தொலைபேசியில் மிரட்டினர். மேலும் என்னை தாக்குவதற்காக எனது வீட்டின் முன்பு வந்தனர். நான் வேறு சில ஆசிரியர்களுடன் மோரன் காவல் நிலையத்தை அடைந்தேன்” என தெரிவித்தார்.
பள்ளி வளாகத்திற்கு வந்த போலீஸார், மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். மைனர் மாணவர்கள் மீது முறையான புகார் இன்னும் பதிவு செய்யப்படாததால், இதுவரை எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.