வாட்ஸ் ஆப் வாயிலாக ரூ.1 கோடி சுருட்டல்: சைபர் க்ரைம் போலீஸாருக்கு நீடிக்கும் சவால்

By காமதேனு

தொழிலதிபர் ஆதார் பூனாவாலாவை போலியாக சித்தரித்து வாட்ஸ் வாயிலாக ரூ1.01 கோடியை சுருட்டிய வழக்கில், பிரதான குற்றவாளிகளை நெருங்க வழியின்றி சைபர் க்ரைம் போலீஸார் தவித்து வருகின்றனர்.

கோவிஷீல்ட் உட்பட பல்வேறு தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் ஆதார் பூனாவாலா. சீரம் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சதீஷ் தேஷ்பாண்டேக்கு செப்டம்பர் மாதம் ஒரு வாட்ஸ் ஆப் தகவல் வந்தது. புரொஃபைலில் ஆதார் பூனாவாலா புகைப்படம் இருந்ததில் தனக்கு வந்த செய்தியை உண்மை என்றே நம்பினார் சதீஷ் தேஷ்பாண்டே. அவசரத்தில் வாட்ஸ் ஆப்பில் வந்த செய்தியை மட்டுமே வாசித்து அதனை செயல்படுத்துவதில் மும்முரமானார் சதீஷ் தேஷ்பாண்டே.

வர்த்தக பரிமாற்றங்கள் குறித்த மேலான தகவல்களுடன், உடனடியாக குறிப்பிட்ட 7 வங்கிக் கணக்குகளுக்கு மொத்தமாக ரூ.1.01 கோடியை மாற்றுமாறு அதில் உத்தரவு இருந்தது. நிறுவனத்தின் தலைவர் அனுப்பிய தகவல் என்ற அவரசத்தில், உடனடியாக நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளில் இருந்து பெருந்தொகையை வாட்ஸ் ஆப்பில் குறிப்பிட்ட கணக்குகளுக்கு சதீஷ் அனுப்பி வைத்தார். பின்னர் வங்கி பரிமாற்றங்களை சரிபார்க்கும்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார். இது தொடர்பான வழக்கை கையிலெடுத்த புனே சைபர் க்ரைம் போலீஸார், 7 வங்கி கணக்குகளையும் அதன் உரிமையாளர்களையும் துழாவினர்.

நாட்டின் வெவ்வேறு மூலைகளில் செயல்படும் அந்த வங்கி கணக்குகளில் இருந்து மின்னல் வேகத்தில் சுமார் 40 வங்கிக் கணக்குகளுக்கு பெருந்தொகை பிரித்து அனுப்பப்பட்டதை மட்டுமே அவர்களால் மோப்பமிட முடிந்தது. 2 மாத தொடர் விசாரணைகளின் முடிவில் ரூ.13 லட்சத்தை மட்டுமே சைபர் போலீஸாரால் முடக்க முடிந்தது. நேற்றுடன் 7 நபர்களை கைது செய்யப்பட்டுள்ள போதும், அவர்களுக்கு மூளையாக செயல்பட்ட மர்ம நபரை அவர்களால் இன்னமும் பிடிக்க முடியவில்லை. மிகப்பெரும் நெட்வொர்க் பின்னணியில் திட்டமிட்டு இணையவழியில் தேட்டை போடும் சைபர் கிரிமினல்களின் வேலை என்பதால், புனே சைபர் க்ரைம் போலீஸார் கிறுகிறுத்துப் போயுள்ளனர்.

நாட்டின் மிகப்பெரும் நிறுவனத்தின் தலைமையிடமே கன்னம் வைக்கும் சைபர் கொள்ளையர்களும், அவர்களை வளைக்க முடியாது தடுமாறும் சைபர் போலீஸாரும், சாமானியர்கள் உஷாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE