சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று நடைபெற்ற என்கவுன்டர் சம்பவத்தில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் இன்று(நவ.26) காலை இந்த சம்பவம் நடைபெற்றது. பிஜப்பூர் மாவட்டத்தின் பொம்ரா காட்டுப் பகுதியில் சுமார் 40 மாவோயிஸ்டுகள் கூடியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். பாதுகாப்பு படையினர் சூழ்ந்ததை அறிந்து சுதாரித்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கித் தாக்குதலில் இறங்கினர். இருதரப்புக்கும் இடையே நீடித்த துப்பாக்கிச் சண்டையின் இறுதியில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். காயமடைந்த சில மாவோயிஸ்டுகள் உட்பட பலர் அடர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தனர்.
சிஆர்பிஎஃப், மாவட்ட அதிரடிப் படை உள்ளிட்டோர் அடங்கிய பாதுகாப்பு படையினரின் இந்த என்கவுன்டரில் பலியானவர்களில் 2 பெண்களும் அடங்குவர். என்கவுன்டர் தாக்குதலில் மாவோயிஸ்டுகள் கைவிட்டுச் சென்ற துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிப்பொருட்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் தொடரும் மாவோயிஸ்ட் - பாதுகாப்பு படையினருக்கு இடையிலான மோதலில், தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.