பிஹார் மாநிலத்தில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு தண்டனையாக 5 தோப்புக்கரணங்கள் விதிக்கப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.
பிஹார் மாநிலத்தின் நவாடா மாவட்டம் கன்னாஜ் கிராமத்தை சேர்ந்தவன் அருண் பண்டிட். உள்ளூரில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறான். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு இனிப்புகள் வாங்கித் தந்து தனது பண்ணைக்கு அழைத்து சென்றிருக்கிறான். பின்னர் அங்கிருந்து பீதியோடு வீடு திரும்பிய சிறுமி தனது குடும்பத்தாரிடம் திக்கித்திணறி சிலவற்றை சொல்லியிருக்கிறாள். சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை புரிந்துகொண்ட குடும்பத்தினர் உடனடியாக போலீஸ் புகாருக்கு புறப்பட்டனர். விஷயமறிந்த அருண் பண்டிட் முக்கியஸ்தர்கள் அடங்கிய கிராம பஞ்சாயத்தில் முறையிட்டிருக்கிறான்.
அதன்படி காவல் நிலையத்துக்கு கிளம்பிய சிறுமியின் குடும்பத்தாரை கிராம பஞ்சாயத்தில் வலுக்கட்டாயமாக அமர்த்தினர். சிறுமியின் எதிர்காலம், குடும்பத்தின் கௌரவம், கிராமத்தின் சிறப்பு ஆகியவற்றுக்காக பஞ்சாயத்து விசாரணைக்கு உட்படுமாறு வற்புறுத்தினார்கள். பின்னர் நீண்ட விசாரணை படலத்தை அடுத்து, அருண் பண்டிட் செய்த பலாத்கார குற்றத்துக்கு தண்டனையாக 5 தோப்புக்கரணங்கள் சபையில் இடுமாறு பணித்தனர்.
அந்த தண்டனைக்கு அருண் பண்டிட் உட்பட்டதும் பிரச்சினை தீர்ந்தது என தரப்பினரையும் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். அருண் பண்டிட் தோப்புக்கரணம் இடுவதை செல்போனில் பதிவு செய்த ஒருவர் வாட்ஸ் ஆப் வாயிலாக சுற்றுக்கு விட்டதில் விவகாரம் காவல்துறை கவனத்துக்கு சென்றது. தற்போது அருண் பண்டிட் மட்டுமன்றி தீர்ப்பு வழங்கிய ஊர் முக்கியஸ்தர்களையும் போலீஸார் அள்ளி சென்றுள்ளனர். போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தோப்புக்கரண வீடியோ நாடு முழுக்க பரவியதில் பிஹார் அரசு, இது போன்ற கிராம பஞ்சாயத்துகளின் அழிச்சாட்டியங்களை அடையாளம் காணவும், நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது.