பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஐஜேகே மாநில நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது

By எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம்: விசாரணைக்குச் சென்ற பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஐஜேகே கட்சியின் மாநில நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன் (38) இவர் மீது கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும், ‘ஏ ப்ளஸ்’ பிரிவு ரவுடியாகவும் இருந்து வரும் அறிவழகனிடம் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக விழுப்புரம் நகர காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளரான பிரியங்கா இன்று காலை அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது உதவி ஆய்வாளர் பிரியங்காவிடம் அறிவழகனும், அவரது ஆட்களும் ஆபாசமாக பேசி அவரைத் தாக்க முயற்சித்துள்ளனர். இது குறித்து உதவி ஆய்வாளர் பிரியங்கா அளித்த புகாரின் பேரில் ரவுடி அறிவழகன் மற்றும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி காந்திபுரத்தைச் சேர்ந்த ஜோதி என்கிற பார்த்திபன்(31) ஆகிய இருவர் மீது கொலை மிரட்டல் விடுத்தல், அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், அறிவு என்கிற அறிவழகன் பாரிவேந்தரின் ஐஜேகே கட்சியின் மாநில இளைஞரணி அமைப்புச் செயலாளராக பதவி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அறிவழகன் கைது தொடர்பாக வேறு சில தகவல்களும் உலாவி வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் விழுப்புரத்தில் கொல்லப்பட்ட ரவுடி ஒருவருக்கு இன்று பிறந்தநாள். இன்று அதற்கான விழாவை அவரது ஆதரவாளர்கள் கொண்டாட உள்ளனர். இந்த நிலையில், அறிவழகன் புதுச்சேரி செல்வதை அறிந்த அந்த ரவுடியின் ஆதரவாளர்கள், அறிவழகனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்தே அறிவழகனை காப்பாற்றும் நோக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE