மேலும் பல ஷ்ரத்தாக்கள்: தலைநகரை உலுக்கிய கொடூரக் கொலைகள்!

By ஆர். ஷபிமுன்னா

டெல்லியில் ஷ்ரத்தா எனும் இளம்பெண் 35 துண்டுகளாக்கிக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, நகரில் நடந்த இதே வகையிலான பல கொடூரச் சம்பவங்கள் இப்போது நினைவுகூரப்படுகின்றன. பதைபதைக்க வைக்கும் பயங்கரங்கள் நிறைந்த பட்டியல் அது.

இரட்டைக் கொலை செய்த பில்லா - ரங்கா

இதுபோன்ற கொடூரங்களின் முதல் சம்பவமாக டெல்லியின் பில்லா - ரங்கா வழக்கு நாட்டையே உலுக்கியது. 1978 ஆகஸ்ட் 26-ல், கீதா(16) மற்றும் அவரது தம்பி சஞ்சய் சோப்ரா(14) இருவரும் கடத்தப்பட்டனர். பிணைய தொகைக்கான இக்கடத்தல் சம்பவத்தை பில்லா எனப்பட்ட ஜஸ்பீர்சிங் மற்றும் ரங்கா என்றழைக்கப்பட்ட குல்தீப்சிங் ஆகியோர் அரங்கேற்றினர். பிறகு கடத்தப்பட்டவர்களின் தந்தை கப்பல் படையின் கேப்டன் என்றறிந்த பின், தாம் சிக்கி விடுவோம் என இருவரும் அஞ்சினர். இதனால், அடுத்த இரண்டு நாட்களில் கீதா, சஞ்சய் இருவரும் கடத்தல்காரர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

இருவரும் கடத்தப்பட்ட சம்பவமே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியின் தவுலா குவாவில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து அகில இந்திய வானொலி நிலையத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தனர். மாலை 7.00 மணிக்குத் தொடங்கும் ’யுவா வாஹினி’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்குத் தங்கள் பியட் காரில் ‘லிப்ட்’ கொடுக்கும் சாக்கில் பில்லாவும் ரங்காவும் அவர்களைக் கடத்தினர். கீதாவும் சஞ்சய்யும் கடத்தல்காரர்களுடன் ஓடும் காரில் போராடி, தப்ப முயன்றனர். வழியில் கண்ட பொதுமக்களிடம் உதவக் கோரி கூக்குரல் இட்டனர்.

பலரும் காரை நிறுத்த முயன்றனர். இதற்காக ஒருவர் காரின் முன் சாலையில் தனது சைக்கிளை வீசி தடுத்தும் அந்த பியட் நிற்கவில்லை. இந்த பியட் காரை தன் ஸ்கூட்டரில் துரத்திய பகவான் தாஸ் என்பவர், பிடிக்க முடியாமல் டெல்லியின் காவல் துறைக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தார். ஆனால், அவர்களை மீட்க முடியவில்லை. இரண்டு தினங்களுக்கு பிறகு டெல்லியின் எல்லைப் பகுதியில் இருவரின் உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

இந்தச் சம்பவம் செய்திகள் அன்றாடம் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பின. தீவிரத் தேடுதலுக்குப் பின் கொலையாளிகள் செப்டம்பர் 8-ல், ஆக்ராவில் ஓடும் ரயிலில் ஏறியபோது கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பில்லா ஏற்கெனவே மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட பல இடங்களில் வழிப்பறி, கொலை, ஆள்கடத்தலில் ஈடுபட்டது தெரிந்தது. பில்லாவிற்கு உதவியாக இடையில் ரங்காவும் இணைந்துகொண்டாராம்.

கீதா- சஞ்சய் கொலை வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் பில்லாவுக்கும் ரங்காவுக்கும் மரண தண்டனை விதித்தது. உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்தது. 1982 ஜனவரி 30-ல் டெல்லியின் திஹார் சிறையில் இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, ஐந்து பிரபல பத்திரிகைகளின் செய்தியாளர்கள் பில்லாவையும் ரங்காவையும் பேட்டி கண்டனர். இதற்கான அனுமதிபெற அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டியதானது. பின்னாட்களில் பில்லா-ரங்காவின் கதை ஒரு தனியார் தொலைக்காட்சியிலும் வெளியாகி பிரபலமானது. அவர்களது பெயரில் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் திரைப்படங்களும் வெளியாகி புகழ்பெற்றன.

தந்தூரி அடுப்பு வழக்கு

நைனா சஹானி என்ற இளம்பெண் தன் கணவர் சுசில் சர்மாவால் கொல்லப்பட்ட சம்பவமும் டெல்லியை அதிரவைத்த சம்பவங்களில் ஒன்று. இளைஞர் காங்கிரஸின் தலைவரான சுசில் சர்மா, டெல்லியின் ஒரு தொகுதி எம்எல்ஏ-வாகவும் இருந்தவர். மனைவி நைனாவிற்கு அவரது நண்பர் மத்லப் கானுடன் இருந்த நட்பை சுசில் எதிர்த்தார்.

சம்பவம் நடந்த அன்று நைனா நெடுநேரமாக போனில் பேசிக்கொண்டிருந்தார். இதை கண்ட சுசில், அவர் மத்லப் பானுடன் பேசியதாக சந்தேகம் கொண்டு தனது கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். துண்டுகளாக்கப்பட்ட நைனாவின் உடலை ஒரு உணவுவிடுதியின் மேலாளரின் உதவியுடன் ரொட்டி சுடும் தந்தூரி அடுப்பில் போட்டு சாம்பலாக்கினார். பிறகு சம்பவம் கசிந்து பெரும் பரபரப்பு கிளம்பிய பின் சரணடைந்தார் சுசில், இவ்வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை, குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாகி சிறையிலிருந்து 2018-ல் விடுதலையானார்.

நிதாரி தொடர் கொலைகள்

டெல்லியின் புறநகர்ப் பகுதியிலுள்ள நொய்டாவின் நிதாரி கிராமத்து தொடர்கொலைகள் தொடர்பான வழக்கும் முக்கியமானது. தொழிலதிபர் மொஹிந்தர் சிங் பாந்தருக்குச் சொந்தமான பங்களாவின் வளாகத்தில், 2006 டிசம்பர் 28-ல் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. தோண்டத் தோண்ட 15 மண்டை ஓடுகள் கிடைத்தன. பாலீத்தீன் பைகளில் உடல்களின் பாகங்களும் கிடைத்தன. அப்பகுதியில் காணாமல் போன இருவர் தொடர்பான புகாரில் தோண்டல் நிகழ்ந்தது. இந்த வழக்கில் மொஹிந்தர் சிங்கும் அவரது உதவியாளர் சுரேந்தர் கோலியும் கைதுசெய்யப்பட்டனர்.

5 பெண்கள், 9 இளம்பெண்கள் மற்றும் 2 சிறுவர்களை அவர்கள் கொன்றது தெரியவந்தது. பாலியல் வன்கொடுமை செய்து அவர்களைக் கொன்றார் மொஹிந்தர் சிங். சில சடலங்களுடன் கோலியும் உறவு வைத்ததாக ஒப்புக்கொண்டார். இந்த உடல்களை பல துண்டுகளாக்கி வசிக்கும் பங்களாவின் பின்புறம் புதைத்திருந்தனர். சில துண்டுகள் அவரது வீட்டு குளிர்சாதனப் பெட்டியிலும் இருந்தமையால் அதை இருவரும் சமைத்து உண்டதாகவும் பேசப்பட்டது.

இதில் சிபிஐ, மொஹிந்தர் மீது 5, கோலி மீது 10 வழக்குகளைப் பதிவுசெய்தது. மொஹிந்தர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் 2009 செப்டம்பர் 9-ல் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு அவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்படாதது காரணமாக்கப்பட்டது. எனினும், கடைசியாக 2017 ஜுலை 24-ல் காஜியாபாத்தின் சிபிஐ நீதிமன்றம் இருவருக்கும் மரண தண்டனை விதித்தது.

ஆரூஷி கொலை வழக்கின் மர்மம்

நொய்டாவைச் சேர்ந்த பல் மருத்துவர் தம்பதிகளின் ஒரே மகள் ஆரூஷி கொலை வழக்கின் மர்மம் இன்னும் கூட விலகவில்லை. 2008 மே 15-ல் ஆரூஷி தனது பூட்டிய அறையில் சடலமாகக் கிடந்தார். ஆரம்பத்தில், அவரைக் கொன்றது வீட்டுப் பணியாளர் ஹேமராஜ்(54) என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், அவ்வீட்டின் மேல்மாடியில் அவரும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்த இரண்டு கொலையிலும் ஆரூஷியின் பெற்றோர்களான டாக்டர் ராஜேஷ் தல்வார் மற்றும் டாக்டர் நுபுர் தல்வார் மீது பலத்த சந்தேகம் எழுந்தது. சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்தது. காஜியாபாத்தின் சிபிஐ நீதிமன்றம் இருவருக்கும் கடந்த நவம்பர் 2013-ல் ஆயுள் தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் இருவர் மீதும் தவறில்லை என 2017-ல் விடுதலை பெற்றனர்.

72 துண்டுகளாக்கப்பட்ட மனைவி

டெல்லி ஷ்ரத்தா கொலைச் சம்பவம் போல உத்தராகண்ட் மாநிலத்திலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

உத்தராகண்டின் டெஹ்ராடூனில் நடந்த சம்பவம் அது. காதல் மணம் புரிந்த ஐடி பொறியாளர் ராஜேஷ் குலாட்டி-அனுபமா குலாட்டி தம்பதி தொடர்பானது. இருவருக்கும் இடையில் அவ்வப்போது சண்டை நடப்பது உண்டு. 2010 அக்டோபர் 17-ல் வழக்கமான மோதல் நிகழ்ந்தது. இதில் கடும் கோபமடைந்த ராஜேஷ் தன் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றார். கொலையை மறைக்க ராஜேஷ், 72 துண்டுகளாக அனுபமாவின் உடலை வெட்டினார். அதை ஒரு பெரிய அளவிலான குளிர்சாதனப் பெட்டியில் போட்டுமூடி மறைத்து வைத்தார். அதுமட்டுமல்ல, அதே வீட்டில் வீட்டில் தன் இரண்டு குழந்தைகளுடனும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்துள்ளார் ராஜேஷ். தங்கள் தாய் குறித்து கேட்ட குழந்தைகளிடம் அவர் டெல்லி சென்றிருப்பதாகவும், விரைவில் திரும்புவார் என்றும் கூறி சமாளித்துள்ளார்.

அனுபமா குலாட்டி - ராஜேஷ் குலாட்டி

பின்னர், குளிர்சாதனப் பெட்டியிலிருந்த 72 துண்டுகளில் ஒவ்வொரு நாளும் ஒரு துண்டை பையில் எடுத்துச் சென்று அருகிலுள்ள முசோரியின் காடுகளில் வீசி வந்துள்ளார். ஒருநாள் அனுபமாவை பார்க்க டெஹ்ராடூன் வந்துள்ளார் அவரது சகோதரர் சித்தந்த் பிரதான். அவர் கேட்ட கேள்விக்கு ராஜேஷ் அளித்த மழுப்பலான பதில்கள் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தின. அவர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார். 2017 செப்டம்பர் 1-ல் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் மேல்முறையீடு உத்தராகண்டின் உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு வரும் ராஜேஷின் மனு, தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.

பெரும்பாலும் இதுபோன்ற வழக்குகளின் விசாரணை பத்திரிகைகளால்தான் துரிதப்படுத்தப்படுகிறது. இப்படியான கொடூரச் சம்பவங்கள் தொடர்பாக வெளியான திரைப்படங்கள் பொதுமக்களின் மனதிலும் வேரூன்றிவிட்டன. எவ்வளவுதான் விழிப்புணர்வூட்டினாலும் குற்றங்கள் குறையாமல் தொடர்வதுதான் வேதனை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE