‘அவனை தூக்கில் போடுங்கள்..’: ஷ்ரத்தா குடும்பத்தினர் குமுறல்

By எஸ்.சுமன்

’எங்கள் பெண்ணுக்கு நடந்தது போன்ற சம்பவங்கள் இனி எவருக்கும் நடக்காதிருக்க கொலையாளி அஃப்தாஃபை தூக்கில் போடுங்கள்’ என ஷ்ரத்தாவின் குடும்பத்தினர் குமுறி உள்ளனர். ஸ்ரத்தா கொலை வழக்கை விசாரிக்கும் டெல்லி மற்றும் மும்பை காவல்துறை மட்டுமல்லாது, நாடு முழுக்கவுமே அபலை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இளைய சமூகத்தினர் மத்தியில் பரவிவரும் லிவ் இன் வாழ்க்கை முறைக்கு எதிராகவும், சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும், காதலின் பெயரிலான மாய்மாலங்களுக்கு எதிராகவும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

ஷ்ரத்தாவை கொன்ற அஃப்தாப் சடலத்தை சுமார் 35 துண்டங்களாக்கி நள்ளிரவு தோறும் ஒவ்வொன்றாக டெல்லியின் பல்வேறு புறநகர் பகுதிகளில் எறிந்துள்ளான். இதனால் பெண்ணின் இறுதி சடங்கைக்கூட முழுமையாக நடத்த வழியின்றி ஷ்ரத்தாவின் குடும்பத்தினர் தாங்கொணாத வேதனை அடைந்துள்ளனர். ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் முழுமையாக கிடைத்த பின்னரே கொலையானதுஅவர்தான் என்பதை சட்டப்படி நிறுவ முடியும் என்பதால் டெல்லி போலீஸாரும் திணறி வருக்கின்றனர். குறிப்பாக ஷ்ரத்தாவின் தலை, அவரை கொல்ல உபயோகமான ஆயுதம், ஷ்ரத்தாவின் அலைபேசி ஆகியவை போலீஸாருக்கு அவசியமாகின்றன.

அஃப்தாப் - ஷ்ரத்தா

மும்பையில் காதலித்து டெல்லியில் குடியேறி, லிவ் இன் முறையில் அங்கீகாரமற்ற தம்பதியராய் வாழ்க்கையை தொடங்கியவர்கள் ஷ்ரத்தா வாக்கர் - அஃப்தாப் அமீன் பூனாவாலா ஜோடி. டெல்லியில் குடியேறியது முதலே அவர்கள் மத்தியில் திருமணம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. திருமணத்தை ஷ்ரத்தா வலியுறுத்தியதும், அஃப்தாபின் பிற பெண்களுடனான பழக்கம் குறித்து கேள்விகள் எழுப்பியதும், ஷ்ரத்தாவின் வருமானத்தை அஃப்தாப் அதிகம் குறிவைத்ததும் இருவர் மத்தியிலான பிரச்சினைக்கு முக்கிய காரணங்கள் ஆயின.

இந்த தகராறுகளின் உச்சமாக மே 18 அன்று ஷ்ரத்தாவை கொன்ற அஃப்தாப், அடுத்த நாளே புதிய ஃபிரிட்ஜ் வாங்கி அதில் சடலத்தை துண்டங்களாக சேகரித்து வைத்திருக்கிறான். நள்ளிரவு தோறும் டெல்லியின் வெவ்வேறு திசைகளில் அடர்ந்த புதர் பகுதிகளில் துண்டுகளை எறிந்து வந்திருக்கிறான். இப்படி 20க்கும் மேலான தினங்கள் அவன் வெளியே சென்று வந்ததை சிசிடிவி பதிவுகளில் போலீசார் சேகரித்து உள்ளனர்.

போலீஸ் பிடியில் கொலையாளி

துண்டாடப்பட்ட ஸ்ரத்தா சடலத்தை ஃபிரிட்ஜில் வைத்தவாறு, வெவ்வேறு பெண்களை வரவழைத்து அதே வீட்டில் அஃப்தாப் உல்லாசமாக இருந்ததாகவும், ஸ்ரத்தாவின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து அப்பெண்ணின் தோழிகளிடம் பேசியது தெரிய வந்துள்ளது. தடயங்களை மறைப்பது குறித்து இணையத்தில் நீண்ட தேடலையும் மேற்கொண்டுள்ளான். இதற்காக அஃப்தாப் பயன்படுத்திய ’டேட்டிங்’ செயலிகள், இன்ஸ்டாகிராம் உரையாடல்கள், ஸ்ரத்தாவை கொன்ற பிறகு அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ54 ஆயிரத்தை தனக்கு மாற்றியது உள்ளிட்டவற்றுக்கான டிஜிட்டல் ஆவணங்களையும் காவல்துறை சேகரித்துள்ளது.

இந்த கொலையை அஃப்தாப் ஒருவன் மட்டுமே செய்திருக்க வாய்ப்பில்லை என்ற கோணத்திலும் போலீஸ் விசாரணை தொடர்கிறது. 5 நாள் போலீஸ் விசாரணையில் அஃப்தாப் காட்டும் அழுத்தமும், அலட்சியமும் அவன் பின்னே வேறு சிலரும் இருப்பதற்கான சந்தேகங்களை அதிகரித்துள்ளன. நடந்த கொலை காதலர்கள் மத்தியிலான குடும்பத் தகராறில் விளைந்தது அல்ல என்றும், திட்டமிடப்பட்ட ’லவ் ஜிகாத்’ சதியின் முடிவு என்றும் இந்துத்துவ அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. விசாரணையில் அழுத்தம் காட்டும் அஃப்தாபை தீவிரமாக துருவ, உண்மை கண்டறியும் சோதனைக்கு அவனை உட்படுத்த நீதிமன்ற அனுமதியை காவல்துறை கோரியுள்ளது.

இதற்கிடையே ஆங்காங்கே வீசப்பட்ட உடல் பாகங்களில் ஒரு சில எலும்புகள் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளன. இதனால் ஷ்ரத்தாவுக்கான இறுதி சடங்கு நடைமுறைகளைக்கூட நிறைவேற்ற வழியின்றி அவரது குடும்பம் தவிக்கிறது. வேதனையில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினர் சார்பாக மௌனம் கலைந்திருக்கும் ஷ்ரத்தாவின் மாமா தனஞ்செய் என்பவர், ‘நாட்டில் இதுபோன்ற கொடுமைகள் நிகழாதிருக்க கொலையாளியை தூக்கில் போட வேண்டும்’ என குமுறி இருக்கிறார். ஷ்ரத்தா சார்ந்த மகாராஷ்டிர மாநிலமும் துக்கத்தில் பங்கெடுத்திருக்கிறது. சிவசேனா எம்பியான சஞ்செய் ராவத், ‘வழக்கமான சட்ட நடைமுறைகளுக்கு அப்பால் கொலையாளியை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும்’ என்று கொந்தளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE