எடப்பாடி அருகே தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்!

By த.சக்திவேல்

மேட்டூர்: எடப்பாடி அருகே தோட்டத்திற்குள் புகுந்து சிறுத்தை தாக்கியதில் பசு மாடு உயிரிழந்த சம்பவத்தால் கிராம மக்கள் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உள்ளனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பக்கநாடு ஊராட்சிக்கு உட்பட்ட கோம்பைக்காடு பகுதியில் கடந்த 10ம் தேதி மாதையன் என்பவரது வீட்டில் கட்டியிருந்த பசு மாட்டை சிறுத்தை இழுத்துச் சென்று அடித்துக் கொன்றது. இதுகுறித்து தகவலறிந்த மேட்டூர் வனச்சரகர் சிவானந்தம் தலைமையில் வனவர் ஜெயக்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். மேலும், சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய 13 டிராப் கேமராக்கள் பொருத்தியதுடன், சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர். ஆனால், சிறுத்தை சிக்கவில்லை.

இந்நிலையில் பக்கநாடு ஊராட்சிக்கு அருகிலேயே ஆவடத்தூர் அடுத்த குரங்கு பாலிகாடு என்ற பகுதியைச் சேர்ந்த பூலான் என்பவர், இன்று காலை தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு பசு மாடு கடித்து குதறப்பட்டு உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அங்கு பதிவாகியிருந்த கால் தடங்களை ஆய்வு செய்ததில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது உறுதியானது.

இதையடுத்து, சிறுத்தையைப் பிடிக்க, அப்பகுதியில் கூண்டு வைத்து கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், அப்பகுதியில் 7 டிராப் கேமராக்களையும் பொருத்தியுள்ளனர். இந்நிலையில் ஒரே வாரத்தில் 2 மாடுகளை சிறுத்தை தாக்கிக் கொன்றது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறுத்தையை விரைவில் பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுத்தை நடமாட்டம் இருப்பதைத் தொடந்து வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் எனவும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE